தலையங்கம்

இந்தியா ஒரு பாலைவன சோலை

உலகமே பாலைவனமாக இருக்கும் சூழ்நிலையில், இந்தியாவின் பொருளாதார நிலை பசுஞ்சோலையாக செழிப்புடன் உள்ளது.

நாடாளுமன்ற கூட்டத்தொடர் ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி மாதம் ஜனாதிபதி உரையுடன் தொடங்கும். ஜனாதிபதி உரையில், கடந்த ஆண்டு மத்திய அரசு என்ன செய்தது? என்பது தொடர்பான சாதனை பட்டியல்தான் இடம்பெற்றிருக்கும். அது ஒரு, ‘பிராக்ரஸ் ரிப்போர்ட்’ போலத்தான் இருக்கும். அடுத்து இந்த ஆண்டு மத்திய அரசு என்னென்ன திட்டங்களை நிறைவேற்றப்போகிறது என்பதை பட்ஜெட் தெரிவிக்கும். ஆனால் அதற்கு முன்பு பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல் செய்யப்படும். இந்த பொருளாதார ஆய்வறிக்கையை தலைமை பொருளாதார ஆலோசகரின் குழு தயாரிக்கும். அந்த வகையில், இந்த ஆண்டு பட்ஜெட் நேற்று நிதி மந்திரி நிர்மலா சீதாராமனால் தாக்கல் செய்யப்பட்டது. அதற்கு முன்பாக கடந்த வியாழக்கிழமை நாடாளுமன்றத்தில் இந்த ஆண்டுக்கான பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல் செய்யப்பட்டது.

இதனை ஒரு கால கண்ணாடி என்று சொல்லலாம். அது உள்ளதை உள்ளபடி காட்டும் நிதர்சனமான அறிக்கையாகும். நாட்டின் பொருளாதார நிலை எப்படி இருக்கிறது? வரும் ஆண்டில் எப்படி இருக்கும்? என்பதை ஒரு வெள்ளை அறிக்கைபோல் தெரிவிக்கும். இன்னும் சொல்லப்போனால் நாடு போகவேண்டிய வழியைக்காட்டும், வழிகாட்டி பலகையாக இருக்கும். அந்த வழியில் இந்த ஆண்டுக்கான பொருளாதார ஆய்வறிக்கையில் கூறப்பட்டுள்ள தகவல்கள் நாட்டுக்கு பெரிய உத்வேகத்தை அளித்துள்ளது. உலகமே இருள் சூழ்ந்த பொருளாதார நிலையில் உழன்றுகொண்டு இருக்கும்போது, இந்திய பொருளாதாரம் ஒளிவீசி ஜொலிக்கும் வகையில் இருப்பதை இந்த அறிக்கை பட்டவர்த்தனமாக பளிச்சிடுகிறது. இந்த ஆண்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி 7.4 சதவீதமாக இருக்கும் என்ற மகிழ்ச்சியான செய்தியை தெரிவித்துள்ளது.

இது இப்போது மட்டுமல்ல தொடர்ந்து 4-வது ஆண்டாக ஏற்பட்டுள்ள வளர்ச்சி என்பதன்மூலம் பொருளாதாரத்தின் விரைவு பாதையில் இந்தியா தன்னை நிலைநிறுத்திக் கொண்டிருக்கிறது என்பதை பிரதிபலிக்கிறது. இந்தியாவின் மொத்த வளர்ச்சியில் தனியாருடைய நுகர்வு மட்டும் 61.5 சதவீதம் இருக்கிறது என்று கூறியிருப்பது எதிர்கால வளர்ச்சியை கட்டியம் கூறுவதுபோல இருக்கிறது. ஆனால் வருங்காலங்களிலும் இந்த வளர்ச்சி உறுதிபடவேண்டும் என்றால் தனியார் முதலீடு இன்னும் அதிகமாக வேண்டும் என்று திட்டவட்டமாக இந்த அறிக்கை கூறியுள்ளது. வீடுகளில் உள்ள சேமிப்பு டெபாசிட்டுகளைத்தாண்டி பங்குச்சந்தைகள், மியூச்சுவல் பண்டுகள் மற்றும் சொத்துகளில் முதலீடாக மாறியுள்ளது. என்னதான் அமெரிக்கா 50 சதவீத வரியை விதித்து ஆட்டம் காட்டினாலும் இந்தியாவின் ஏற்றுமதி உயர்ந்திருக்கிறதே தவிர சரிந்துவிடவில்லை.

Also read:ஜனாதிபதி மாளிகை வளாக தோட்டம் திறப்பு: பொதுமக்கள் நாளை மறுநாள் முதல் பார்வையிடலாம்

ஆனாலும் இந்தியாவில் தயாரிக்கப்படும் சுதேசி பொருட்களுக்கு ஏற்றுமதி செய்யும் வழிகளை திறக்கவேண்டுமே தவிர, தடுப்பு சுவரை கட்டி விடக்கூடாது என்ற ஆலோசனையை இந்த அறிக்கை கூறியுள்ளது. உலகளாவிய வணிக ஏற்றுமதியில் இந்தியாவின் பங்கு ஒரு சதவீதம் முதல் 1.8 சதவீதம் வரை கிட்டத்தட்ட 2 மடங்கு அதிகரித்துள்ளது. அடுத்து சேவைகள் ஏற்றுமதியில் 387.6 பில்லியன் அமெரிக்க டாலர் (ரூ.35.27 லட்சம் கோடி) அளவு வளர்ச்சியை எட்டி 13.6 சதவீத வளர்ச்சியை பெற்றிருக்கிறது. இந்தியாவின் அன்னிய செலாவணி கையிருப்பு 701.4 பில்லியன் டாலராக (ரூ.63.82 லட்சம் கோடி) இருக்கிறது. உலகமே பாலைவனமாக இருக்கும் சூழ்நிலைக்கு மத்தியில், இந்தியாவின் பொருளாதார நிலை பசுஞ்சோலையாக செழிப்புடன் காட்சியளித்து புதிய நம்பிக்கையை கொடுத்துள்ளது.

அஜித்பவார் மறைவு: தேர்தல் பிரசாரத்தை கைவிட்ட முதல்-மந்திரி பட்னாவிஸ்

பாலஸ்தீனம் தனி நாடாக உருவாக இந்தியா ஆதரவு

பொருளாதார தொலை நோக்கு பார்வையில்லாத பட்ஜெட் - ப.சிதம்பரம் விமர்சனம்

சாமானிய மக்களை வறுமைக்குள் தள்ளும் பட்ஜெட் - பினராயி விஜயன் தாக்கு

ஜனவரியில் ரூ.1.93 லட்சம் கோடி ஜி.எஸ்.டி. வரி வசூல்