

புதுடெல்லி,
டெல்லியில் ஜனாதிபதி மாளிகை வளாகத்தில் 15 ஏக்கர் பரப்பளவில் அழகாக வடிவமைக்கப்பட்ட தோட்டம் உள்ளது. 1917-ம் ஆண்டு சர் எட்வின் லுட்யன்ஸ் வடிவமைத்த இந்த தோட்டம் இங்கிலாந்து மற்றும் முகலாய பாணிகளை கொண்டு வடிவமைக்கப்பட்டது. இதில் பல்வேறு மலர் தோட்டங்கள் உள்ளன. முன்னாள் ஜனாதிபதிகள் அப்துல் கலாம், ராம்நாத் கோவிந்த் ஆகியோரின் ஆட்சி காலத்தில், மூலிகை, போன்சாய் தோட்டம் மற்றும் ஆரோக்கிய வனம் போன்ற கூடுதல் தோட்டங்கள் உருவாக்கப்பட்டன.
இந்த தோட்டம் ஒவ்வொரு ஆண்டும் குளிர்காலத்தில் பொதுமக்கள் பார்வைக்காக திறக்கப்படுவது வழக்கம். அதுபோல் இந்த ஆண்டு இந்த தோட்டம் பொதுமக்கள் பார்வைக்காக நாளை மறுநாள் (செவ்வாய்க்கிழமை) திறக்கப்பட இருக்கிறது. இதற்கான திறப்பு விழா இன்று நடைபெற்றது. விழாவில் ஜனாதிபதி முர்மு கலந்து கொண்டு தோட்டத்தின் நுழைவாயிலாக செயல்படும் பிரதான நீரூற்றில் நின்று, அவர் தோட்டத்தை பொதுமக்களுக்கு திறந்து வைத்தார்.
இந்த தோட்டத்தில் டூலிப்ஸ் மற்றும் பல்வேறு வகையான ரோஜாக்களை தவிர பீம், அர்ஜுன், அந்தர் தெரசா உள்ளிட்ட 145 வகையான ரோஜாக்கள் உள்ளன. மேலும் 80-க்கும் மேற்பட்ட பிற பூக்கள் உள்ளன. இந்த ஆண்டு பார்வையாளர்கள் ஒரு சலசலக்கும் ஓடை, அருவிகளுடன் கூடிய பாதைகள் கொண்ட தோட்டத்தை காணலாம். மேலும் 225 ஆண்டுகள் பழமையான ஷீஷாம் மரத்துடன் குழந்தைகளுக்காக சிறப்பாக வடிவமைக்கப்பட்டு உள்ளது.
வாரத்தில் 6 நாட்கள் காலை 10 மணி முதல் மாலை 6 மணி வரை மக்கள் இந்த தோட்டத்தை பார்வையிடலாம். பராமரிப்பு நாளான திங்கட்கிழமை, மார்ச் 4-ந்தேதி ஹோலி பண்டிகை அன்று அனுமதி இல்லை. மார்ச் 31-ந்தேதி வரை இந்த தோட்டம் திறந்து இருக்கும். இந்த பூங்கா வளாகம் மார்ச் 3 (பாதுகாப்பு படை வீரர்களுக்கு), மார்ச் 5 (மூத்த குடிமக்களுக்கு), மார்ச் 10 (பெண்கள் மற்றும் பழங்குடியின பெண்களின் சுயஉதவி குழுக்களுக்கு), மார்ச் 13 மாற்றுத்திறனாளிகளுக்கு சிறப்பு பிரிவினருக்காக திறக்கப்படும்.
அங்குள்ள அருங்காட்சியகத்தையும் மக்கள் பார்வையிடலாம். ஒவ்வொரு சனிக்கிழமையும் ஜனாதிபதி மாளிகை முன் வளாகத்தில் நடைபெறும் பாதுகாப்பு படையினர் அணிவகுப்பையும் பார்வையிடலாம். இந்த தோட்டத்தை பார்வையிட இணையதளத்தில் ஆன்லைன் முறையில் மட்டுமே டிக்கெட்டுகளை முன்பதிவு செய்ய முடியும். பூங்காவில் நுழைய முன்பதிவு மற்றும் அனுமதி இலவசம் என்பது குறிப்பிடத்தக்கது.