தலையங்கம்

நிரந்தர தீர்வை மீனவர்களே காணட்டும்!

கடலோர கிராமங்களில் வசிக்கும் மீனவர்களுக்கு கடலில் சென்று மீன் பிடிப்பது ஒன்றே வாழ்வாதாரம்.

தினத்தந்தி

தமிழ்நாட்டில் 1,076 கி.மீ. நீளம் கடற்கரை இருப்பது மிகவும் சிறப்பாகும். பூகோள ரீதியாக இயற்கை தந்த பெரும் அருட்கொடை இது. இந்த கடலோர கிராமங்களில் வசிக்கும் மீனவர்களுக்கு கடலில் சென்று மீன் பிடிப்பது ஒன்றே வாழ்வாதாரம். இயற்கை இடர்பாடுகளையும் தாங்கி சென்று மீன்பிடித்தாலும், எல்லை தாண்டி வந்ததாக இலங்கை கடற்படையினரால் மீனவர்கள் கைதாகி, படகுகள் பறிமுதல் செய்யப்படும் சம்பவம் நித்தம் நித்தம் தொடர் கதையாக நடக்கிறது. நேற்று முன்தினம் கூட ராமேசுவரம் மீனவர்கள் 23 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதுவரை மீனவர்கள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டு வந்த நிலையில், சமீப காலமாக நீதிமன்றங்களில் லட்சக்கணக்கான ரூபாய் அபராதமாகவும் விதிக்கப்படுகிறது. அபராதத் தொகையை கட்டி மீனவர்கள் வெளியே வந்தாலும், படகுகள் விடுவிக்கப்படுவதில்லை. இதனால், தமிழகம் திரும்பும் மீனவர்கள் வாழ்வாதாரம் இழந்து தவிக்கின்றனர். இதுவரை சொந்த படகு வைத்திருந்த மீனவர்கள் கூட, கூலிக்கு வேறு படகுகளில் மீன்பிடிக்க செல்ல வேண்டிய துர்ப்பாக்கிய நிலை ஏற்பட்டு விடுகிறது.

தமிழக மீனவர் பிரச்சினைக்கு ஒரு நிரந்தர தீர்வுகாண வேண்டும் என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் மத்திய அரசாங்கத்தை வலியுறுத்தி வருகிறார். மீனவர்களின் கோரிக்கையும் அதுவாகத்தான் இருந்து வருகிறது. சமீபத்தில் இந்திய - இலங்கை அதிகாரிகள் கொண்ட கூட்டு பணிக்குழு இந்த பிரச்சினை குறித்து பேசுவதற்காக கொழும்புவில் கூடியது. இந்த கூட்டம் 2 ஆண்டுகளுக்கு பிறகு நடந்தது. கூட்டத்தில் இந்தியா, "இந்த பிரச்சினை குறித்து இருநாட்டு மீனவர்களும் உட்கார்ந்து பேசும் வகையில் கூட்டத்தை நடத்துவதுதான் சிறந்த வழி" என்று வலியுறுத்தியது. இதற்கு இலங்கை அரசாங்கமும் ஆதரவு தெரிவித்தது.

இரு நாட்டு மீனவர்களும் சந்தித்து பேசி 8 ஆண்டுகள் ஆகின்றன. இரு நாட்டு மீனவர்களுக்கு இடையே உள்ள பிரச்சினையே, தமிழ்நாட்டு மீனவர்கள் பயன்படுத்தும் ஆழ்கடல் மீன்பிடி படகுகள்தான். 2010-ம் ஆண்டு ஆகஸ்டு மாதம் இரு நாட்டு மீனவர்களும் நடத்திய பேச்சு வார்த்தையில், இந்த ஆழ்கடல் மீன்பிடி படகுகள் தொடர்பாக ஒருமித்த முடிவு எட்டப்பட்டது. இதன்படி தமிழக மீனவர்கள் வாரத்துக்கு 2 நாட்கள் வீதம் ஆண்டுக்கு 70 நாட்கள் என்று 9 மாதங்கள் ஒவ்வொரு முறையும் 12 மணி நேரம் மீன் பிடித்துக் கொள்ளலாம். ஆனால், இரு நாட்டு அரசாங்கங்களும் தொடர் நடவடிக்கை எடுக்காமல் விட்டுவிட்டது.

அடுத்தடுத்த கூட்டங்களில் ஆக்கப்பூர்வமான எந்த முடிவும் எடுக்கப்படவில்லை. இனி நடக்கப்போகும் கூட்டத்தில், இரு மீனவர்களும் உட்கார்ந்து இந்த பிரச்சினை ஜவ்வாக இழுத்துக்கொண்டு போவதற்கு ஒரு முடிவு கட்டவேண்டும். முன்பெல்லாம் கச்சத்தீவு திருவிழாவின்போது இரு நாட்டு மீனவர்களும் தங்கள் குடும்பத்தோடு உறவு முறை கூறி பரிசு பொருட்களை பரிமாறிக்கொண்ட நிகழ்வு மீண்டும் தழைக்கும் வகையில், 'ஒரே குடும்பம்' என்ற உணர்வோடு இருவரும் பிழைக்கும் வகையில் ஒரு நிரந்தர தீர்வை காண வேண்டும். இந்த பிரச்சினைகளுக்கு இரு அரசாங்கங்களாலும் நிரந்தர தீர்வை காண முடியாது. மீனவர்களே அந்த தீர்வை காணட்டும். இரு நாட்டு அரசாங்கங்களும் அதை சட்டப் பூர்வமாக்க வேண்டும். இனியும் இந்த பிரச்சினை தமிழக மீனவர்களுக்கு தொடர வேண்டாம். 

தலைவர்கள், தொழில் அதிபர்களுக்கு பிரதமர் மோடி விருந்து

ஜன.30-ல் மேற்கு வங்காளம் செல்கிறார் அமித்ஷா

2047-ம் ஆண்டிற்குள் இந்தியாவில் 400 விமான நிலையங்கள்: பிரதமர் மோடி

7 முறை எம்.எல்.ஏ... அஜித் பவாரின் குடும்ப, அரசியல் வாழ்க்கை விவரம் வெளியீடு

காரைக்காலில் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை