தகவல் தொழில்நுட்ப புரட்சியில் சமுதாயம் பல்வேறு விளைவுகளை சந்தித்துக் கொண்டி ருக்கிறது. புதிய புதிய சமூகவலைத்தளங்கள் உருவாகியுள்ளன. இது அறிவை விசாலமாக்குவதற்கும் பெரும் பயனளிக்கிறது. அவதூறுகளை அள்ளி வீசுவதற்கும், வீண்பழி சுமத்துவதற்கும் இந்த சமூக வலைத்தளங்கள் பயன்படுத்தப்படுகின்றன. அந்த வகையில், இப்போது சமூகவலைத்தளங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்துவது மீடூ (# MeToo) இயக்கம் என்று சொல்லப்படும் சமூகவலைத்தளம் ஆகும். அமெரிக்காவில் வாழும் தரானா பர்க் என்ற ஆப்பிரிக்க அமெரிக்க மனித உரிமைகள் போராளியால் சமூக பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்ட பெண் களுக்காக தொடங்கப்பட்ட சமூகவலைத்தளம் தான் இது. ஆனால் கடந்த ஆண்டு ஹாலிவுட் தயாரிப்பாளர் ஹார்வி வெயின்ஸ்டெயின் மீது பல நடிகைகள் இந்த வலைத்தளத்தில் புகார் கூறியபிறகுதான் பிரபலமாகியது.
இப்போது இந்த வலைத்தளத்தில் பலர்மீது குற்றச்சாட்டுகள் கூறப்படுகிறது. புகழ்பெற்ற பத்திரிகை யாளராக இருந்து, கடந்த 40 ஆண்டுகளாக பல்வேறு பத்திரிகைகளில் ஆசிரியராக பணியாற்றி அரசியலுக்குள்
நுழைந்து தற்போது வெளிவிவகாரத் துறை ராஜாங்க மந்திரியாக இருக்கும் எம்.ஜே.அக்பர் மீது இந்த சமூகவலைத்தளத்தில் பிரியாரமணி என்ற மூத்த பத்திரிகையாளரால் பாலியல்புகார் கூறப்பட்டுள்ளது. வேலைக்கான நேர்முகபேட்டியை ஒரு ஓட்டலில் எம்.ஜே.அக்பர் பலஆண்டுகளுக்கு முன்பு நடத்திய போது, தான் அசவுகரியம் பெறும்வகையில் பல செயல்களை செய்தார் என்று அதில் பதிவிட்டிருந்தார். இதுபோல டெலிவிஷன் டைரக்டர் வின்டாநந்தா 19 ஆண்டுகளுக்கு முன்பு நடிகர் அலோக்நாத் தன்னை கற்பழித்ததாக இதே மீடூ வலைத்தளத்தில் குறிப்பிட் டுள்ளார். மலையாள படஉலகில் இயக்குனராக இருக்கும் டெஸ்ஜோசப் என்பவரும், நடிகர் மற்றும் சட்டமன்ற உறுப்பினராக இருக்கும் முகேஷ் மீது குற்றச்சாட்டுகளை கூறியிருக்கிறார். இந்தி நடிகை தனுஸ்ரீதத்தா, நடிகர் நானாபடேகர் 10 ஆண்டுகளுக்கு முன்பு தனக்கு பாலியல் கொடுமை செய்ததாக புகார் கூறியுள்ளார். தமிழ் திரை உலகத்தையும் இந்தப்புகார் விட்டுவைக்க வில்லை. பாடகி சின்மயி, இதுபோன்ற சம்பவம் பல ஆண்டுகளுக்கு முன்பு தனக்கும் கவிஞர் வைரமுத்துவால் நடந்ததாக புகார் கூறியிருக்கிறார்.
பெண்கள் தைரியமாக தங்களுக்கு இழைக்கப் பட்டுள்ள பாலியல் கொடுமைப்பற்றி இதுபோன்ற சமூகவலைத்தளங்களில் பதிவிடுவதை மத்திய மந்திரி மேனகாகாந்தி உள்பட பலர் வரவேற்றிருக்கிறார்கள். எத்தனை ஆண்டுகளுக்கு முன்பு என்றாலும் சரி, மனதிற்குள்ளேயே போட்டு உலுக்கிக்கொண்டிருந்த கொடுமைகளை இதுபோன்று பதிவிடுவது அவர்கள் மனச்சுமையையும் இறக்கும். தங்களுக்கு அந்த கொடுமையை இழைத்தவர்கள் முகத்திரையையும் கிழிக்க உதவும். மேலும் இதுபோன்ற வலைதளங்கள் இருப்பதால் பாலியல் துன்புறுத்தல் செய்ய இனி ஒரு அச்சஉணர்வு அனைவருக்கும் ஏற்பட்டுவிடும் என்று கூறப்படுகிறது. ஆனால், மற்றொரு பக்கத்தில் பாலியல்முயற்சி கற்பழிப்பு நடந்ததென்றால், இப்போது குற்றம்சாட்டும் பெண்கள் அப்போதே கூறியிருக்கலாம். ஏதோ தனிப்பட்ட விரோதத்திற்காக வீண்பழி சுமத்துவதற்காக சமுதாயத்தில் உயர்நிலையில் உள்ளவர்கள் மீது புகார்கூறுவது நிச்சயமாக ஏற்புடையதல்ல. இவ்வாறு சமூகவலைத்தளங்களில் பதிவிடும்போது அதற்கான ஆதாரத்தையும் சம்பந்தப்பட்டவர்கள் தெரிவிக்கவேண்டும். ஆதாரம் இல்லாமல் இவ்வாறு புகார் கூறுவதால் நடவடிக்கை எடுக்க முடியாது. அவர்கள் புகழுக்கு மட்டுமே பங்கம் ஏற்படுத்த முடியும். சமூக வலைதளங்களில் பதிவிட துணிச்சல் உள்ள பெண்கள் இதுபோன்ற சம்பவங்கள் நடந்த உடனேயே சட்டத்தின் கதவுகளை தட்டுவதே சிறந்ததாகும்.