தலையங்கம்

பெண் போலீசாருக்கான நவரத்தின அறிவிப்புகள்!

போலீஸ் துறையில் ஆண்களே ஆதிக்கம் செலுத்திவந்த நிலையில், முதன்முதலில் பெண்களுக்கும் இடம் கொடுத்தவர் மறைந்த கலைஞர் கருணாநிதி.

போலீஸ் துறையில் ஆண்களே ஆதிக்கம் செலுத்திவந்த நிலையில், முதன்முதலில் பெண்களுக்கும் இடம் கொடுத்தவர் மறைந்த கலைஞர் கருணாநிதி. 1967-ம் ஆண்டு தி.மு.க. ஆட்சிக்கு வரும் முன்பே, குறைந்த சம்பளத்தில் சிரமத்துடன் வாழ்க்கை நடத்தும் ஒரு போலீஸ்காரரின் மனைவி, தன் குழந்தையை தொட்டிலில் போட்டு தாலாட்டு பாடல் பாடுவதுபோல, அவர் எழுதி நடித்த 'உதயசூரியன்' நாடகத்தில் ஒரு காட்சியை அமைத்திருந்தார்.

'ஆராரோ... ஆரிரரோ... ஆணழகா! கண்வளராய்! அஞ்சு பத்து சம்பளத்தில் மிஞ்சுவதில் வளரவந்த அஞ்சுகமே! கண்வளராய்! போலீசு வேலைக்கென்று போகின்ற ங்கொப்பனுக்கு புத்திரனாய் வந்துதித்த தரித்திரமே கண்வளராய். துப்பாக்கி எடுத்துக்கிட்டு போகின்ற ங்கொப்பனிடம் பழம்பாக்கி கேட்டுக்கிட்டு வழிமறிக்கும் கடன்காரன் வருகின்ற காட்சிகளைக் காணாமல் கண்வளராய்! நாடாளும் மந்திரிகள் நலியாமல் வாழ்வதற்கு ஓடாகத் தேய்கின்ற அப்பாவின் புத்திரனே. குருவிக்கூடான வீட்டுக்குள்ளே தவழுகின்ற குலவிளக்கே! கொசுக்கடிக்கு அஞ்சாமல் குவளை மலர்க் கண்வளராய்! காக்கி உடை போட்டுக்கிட்டு சேப்பு தொப்பி மாட்டிக்கிட்டு நாட்டைக் காக்கும் வீரனுக்கு உன்னைப்போல நாலு வந்து பிறந்துவிட்டால் காவி உடை வேணுமடா... கமண்டலமும் தேவையடா...', என்று ஒரு தாயின் வேதனையை பாடல் வரிகளில் காட்டியிருந்தார்.

அப்போதே போலீசாரும், அவர்கள் குடும்பத்தினரும், 'தங்களுக்காக கவலைப்படுகிறார், தி.மு.க. ஆட்சி அமைந்தால், தங்கள் வாழ்வு வளம்பெறும்' என்ற அசைக்க முடியாத நம்பிக்கை கொண்டனர். கலைஞர் கருணாநிதியும் அவர்கள் நம்பிக்கை வீண்போகாமல் இருக்க 1969-ம் ஆண்டு முதலாவதாக போலீஸ் கமிஷனையும், தொடர்ந்து அவருடைய ஆட்சியில் மேலும் 2 போலீஸ் கமிஷன்களையும் அமைத்து, காவலர்களின் நல்வாழ்வுக்காக பல பரிந்துரைகளை பெற்று நடைமுறைப்படுத்தினார். அவர் வழியில் ஆட்சி நடத்திவரும் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், இப்போது 4-வது போலீஸ் கமிஷனை அமைத்துள்ளார். அரைக்கால் சட்டை அணிந்து வந்த போலீஸ்காரர்களை 'பேண்ட்' அணிய வைத்ததும், அவர்களின் தொப்பியை மாற்றியதும் கலைஞர்தான். இது மட்டுமல்லாமல், பெண்களை காவல் படையில் சேர்த்ததும் அவருடைய ஆட்சி காலத்தில்தான்.

1973-ம் ஆண்டுதான் முதன்முதலில், பெண் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டராக உஷாராணியும், 21 பெண் போலீசாரும் சேர்க்கப்பட்டனர். அன்று கலைஞர் போட்ட ஒரு வித்து, இன்று ஒரு பெரிய ஆல மரமாக வளர்ந்து பொன் விழா காண்கிறது. தமிழக காவல்துறையில் உள்ள 1 லட்சத்து 21 ஆயிரத்து 215 பேரில், இப்போது டி.ஜி.பி. அந்தஸ்தில் இருந்து காவலர் வரை 35 ஆயிரத்து 329 பெண் போலீசார் முத்திரை பதித்துக் கொண்டிருக்கிறார்கள். கடந்த வாரம் வெள்ளிக்கிழமை நடந்த மகளிர் காவலர்கள் பொன்விழாவில், முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், அவர்கள் நலனுக்காக நவரத்தின அறிவிப்புகள் என்று கூறப்படும் 9 அறிவிப்புகளை அறிவித்துள்ளார்.

அனைத்து காவல் நிலையங்களிலும் பெண் போலீசாருக்காக கழிப்பறையுடன் கூடிய ஓய்வு அறை அமைக்கப்படும், 'ரோல் கால்' என்று கூறப்படும் காவலர் அணிவகுப்புக்கு காலை 7 மணிக்கு பதிலாக, இனி 8 மணிக்கு வந்தால்போதும், தேவையான அனைத்து இடங்களிலும் அவர்களின் குழந்தைகளை பார்த்துக்கொள்ளும் வகையிலான குழந்தைகள் காப்பகம் அமைக்கப்படும் என்பது உள்பட 9 அறிவிப்புகளை வெளியிட்டுள்ளது, அவர்களுக்கு மகிழ்ச்சியையும், உற்சாகத்தையும் அளித்தது மட்டுமல்லாமல், அவர்களுக்கு பணியில் ஒரு உத்வேகத்தையும் கொடுக்கும்.