தலையங்கம்

நியூசிலாந்து இனி வர்த்தக நட்பு நாடு

நடப்பாண்டு இறுதிக்குள் இந்த ஒப்பந்தம் நடைமுறைக்கு வந்துவிடும் என்று டோட் மெக்லே தெரிவித்துள்ளார்.

இந்தியா பல்வேறு நாடுகளுடன் தடையில்லா வர்த்தக ஒப்பந்தம் செய்து பொருட்களை குறைந்த விலையில் கிடைக்க செய்துவருகிறது. அந்தவகையில், இலங்கை, தென் கொரியா, ஜப்பான், தென் கிழக்கு ஆசிய நாடுகள், மொரிஷியஸ். ஆஸ்திரேலியா, ஐக்கிய அரபு அமீரகம், ஐரோப்பிய ஒன்றியம், இங்கிலாந்து, ஓமன் ஆகிய நாடுகளுடன் நமது நாடு தடையில்லா வர்த்தக ஒப்பந்தம் செய்துள்ளது. இதுமட்டுமல்லாமல் அமெரிக்கா, இஸ்ரேல், நியூசிலாந்து ஆகிய நாடுகளுடன் பேச்சுவார்த்தை நடந்துக்கொண்டிருக்கும் சூழ்நிலையில் நியூசிலாந்துடன் பேச்சுவார்த்தைக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டு, அதில் தடையில்லா வர்த்தக ஒப்பந்தத்துக்கான இறுதிமுடிவும் எட்டப்பட்டுள்ளது. இந்தியா தரப்பில் வர்த்தக மந்திரி பியூஷ்கோயல், நியூசிலாந்து வர்த்தக மந்திரி டோட் மெக்லே முன்னிலையில் இதற்கான ஒப்பந்தம் டெல்லியில் கையெழுத்தானது.

நியூசிலாந்தை பொறுத்தமட்டில் ஒப்பந்தம் கையெழுத்தானால் மட்டும் போதாது, அந்நாட்டு நாடாளுமன்றம் இதற்கு ஒப்புதல் அளிக்கவேண்டும். இந்த பணிகள் அனைத்தும் முடிந்து. நடப்பாண்டு இறுதிக்குள் இந்த ஒப்பந்தம் நடைமுறைக்கு வந்துவிடும் என்று டோட் மெக்லே தெரிவித்துள்ளார். வரலாற்று சிறப்புமிக்க இந்த ஒப்பந்தத்தின்மூலம் இரு நாடுகளுக்கு இடையேயான பரஸ்பர வர்த்தகம் இருமடங்காக உயரும் என்றும், அடுத்த 15 ஆண்டுகளில் நியூசிலாந்தில் இருந்து ரூ.1.88 லட்சம் கோடி மதிப்பிலான முதலீடுகள் மேற்கொள்ளப்படும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. இதன்பயனாக இந்தியாவில் தொழில்உற்பத்தி மட்டுமல்லாமல், வேலைவாய்ப்பும் பெருகும். இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் அனைத்து பொருட்களுக்கும் நியூசிலாந்து வரியை ரத்துசெய்துள்ளது.

இதனால் இந்தியாவில் அதிக வேலைவாய்ப்புகளை அளிக்கும் ஜவுளி, என்ஜினீயரிங், தோல் மற்றும் பிளாஸ்டிக் பொருட்களுக்கு தற்போது 10 சதவீதம் வரை வரி விதிக்கப்பட்டுக்கொண்டிருக்கும் நிலையில், இந்த ஒப்பந்தம் அமலுக்கு வந்தவுடன் வரியே இல்லாமல் ஏற்றுமதி செய்யமுடியும். இதுமட்டுமல்லாமல் வெளிநாட்டு கனவுகளுடன் வாழும் இந்திய இளைஞர்கள் கடலுக்கு நடுவே மிதக்கும் நியூசிலாந்தில் வேலைவாய்ப்பு பெறுவதற்கு வசதியாக 5 ஆயிரம் தற்காலிக வேலைவாய்ப்பு விசாக்களும், 3 ஆண்டுகள்வரை தங்குவதற்கான அனுமதியும் வழங்கப்படும். நமது நாட்டின் தகவல்தொழில்நுட்பம், கல்வி, நிதிச்சேவைகள், சுற்றுலா, கட்டுமானம் மற்றும் வணிகச்சேவை நிறுவனங்கள் இனி தீவுநாடான நியூசிலாந்தில் கால்பதிக்கும். இந்திய விவசாயிகளுக்கு பயனளிக்கும் வகையில் பால் பொருட்கள், விவசாய விளைப்பொருட்களுக்கு வரி விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

நியூசிலாந்தில் இருந்து இந்தியாவில் இறக்குமதி செய்யப்படும் ஆட்டு இறைச்சி, கம்பளி, நிலக்கரி, மரச்சாமான்கள். ஜெர்ரி, கிவி, ஆப்பிள் பழங்களுக்கு வரிவிலக்கு அளிக்கப்பட்டிருக்கிறது. ஒயினுக்கான வரி குறைக்கப்பட்டுள்ளது. நியூசிலாந்தில் இருந்து இறக்குமதி செய்வதைவிட. ஏற்றுமதி செய்வதே அதிகம் என்பதால் இந்த ஒப்பந்தத்தின் மூலம் இந்தியாவுக்கு அதிக பலன்கள் கிடைக்கும். இதில் தமிழ்நாடும் பயன் அடையப்போகிறது. குறிப்பாக தோல் மற்றும் ஆயத்த ஆடைகள் உள்ளிட்ட பொருட்களின் ஏற்றுமதி 2 மடங்கு உயரும் என்று உற்பத்தியாளர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர். அதேசமயத்தில் இந்திய உற்பத்தியும், நியூசிலாந்தில் இருந்து இறக்குமதி செய்யும் பொருட்களால் பாதிக்கப்படாமல் இருப்பதை மத்திய அரசு உறுதி செய்யவேண்டும். மொத்தத்தில் 2010-ம் ஆண்டு தொடங்கிய இந்த தடையற்ற ஒப்பந்த பேச்சுவார்த்தை. 2015-ல் கிடப்பில் போடப்பட்டாலும் கடந்த ஆண்டு மீண்டும் புத்துயிர் பெற்று நியூசிலாந்து, இந்தியாவின் வர்த்தக நட்பு நாடு பட்டியலில் இணைந்துவிட்டது. இந்த ஒப்பந்தத்தினால் இந்தியாவின் வர்த்தகம் தழைக்கும், வேலைவாய்ப்புகளும் குவியும்.