

பிரதமர் நரேந்திர மோடி தொடர்ச்சியாக 3 முறை ஆட்சி அமைத்து சாதனை படைத்தாலும், பா.ஜனதாவுக்கு 3.0 ஆட்சியில் தனிப்பெரும்பான்மை இல்லை. மொத்தம் உள்ள 543 இடங்களில் 240 இடங்களில்தான் பா.ஜனதா வெற்றி பெற்றிருந்தது. கூட்டணி கட்சிகளின் எண்ணிக்கையையும் சேர்த்ததால் 293 இடங்களை பெற்று பா.ஜனதாவால் ஆட்சி அமைக்க முடிந்தது. இந்த எண்ணிக்கை சாதாரண மசோதாக்களை நிறைவேற்றுவதற்கு போதுமானது. ஆனால் அரசியல் சட்டத்தை திருத்தும் மசோதாவுக்கு மூன்றில் இரண்டு பங்கு ஆதரவு வேண்டும் என்ற வகையில், அதற்கு 362 உறுப்பினர்களின் ஆதரவு வேண்டும். அது இல்லாததால்தான் சமீபத்தில் தாக்கல் செய்யப்பட்ட பெண்கள் இடஒதுக்கீடு மற்றும் அதோடு இணைந்த தொகுதி வரையறை, யூனியன் பிரதேச வரையறை மசோதாக்கள் நிறைவேற்றப்படாமல் ஓட்டெடுப்பில் தோல்வியடைந்தன.
இது மக்களவை நிலவரம் என்றால், மாநிலங்களவையிலும் பா.ஜனதாவுக்கு தனிப் பெரும்பான்மை இல்லை. மாநிலங்களவையில் மொத்தம் உள்ள 244 இடங்களில் தனிப்பெரும்பான்மைக்கு 123 இடங்கள் வேண்டும். ஆனால் பா.ஜனதாவுக்கு வெறும் 106 இடங்கள்தான் இருக்கிறது. கூட்டணி கட்சிகளின் ஆதரவோடு மட்டுமே சாதாரண மசோதாக்களை நிறைவேற்ற முடியும். மூன்றில் இரண்டு பங்கு ஆதரவு தேவைப்படும் மசோதாக்களை நிறைவேற்றுவது குறித்து நினைத்துக் கூட பார்க்க முடியாது. எனவேதான் மக்களவையில் இப்போது அரசியல் சட்டத்திருத்த மசோதாக்கள் தோல்வியடைந்ததை ஒரு பாடமாக கொண்டு. இரு அவைகளிலும் தன் பலத்தை அதிகரிக்க பா.ஜனதா ஆபரேஷன் தாமரையை தொடங்கிவிட்டது. இதில் முதல் இன்னிங்சாக ஆம் ஆத்மி கட்சியில் இருந்து 7 உறுப்பினர்களை தங்கள் பக்கம் இழுத்து விட்டது.
ஆம் ஆத்மி கட்சிக்கு மாநிலங்களவையில் மொத்தம் இருந்த 10 உறுப்பினர்களில், 7 பேர் இப்போது பா.ஜனதாவுக்கு தாவிவிட்டனர். அதனால் மாநிலங்களவையில் பா.ஜனதா பலம் 113 ஆகிவிட்டது. இது கட்சி தாவல் தடை சட்டத்தின் கீழ் வருகிறது. எனவே அவர்களின் உறுப்பினர் பதவி செல்லாது என்று ஆம் ஆத்மி கோரியிருந்தாலும், அதற்கு மாநிலங்களவை தலைவரான துணை ஜனாதிபதி சி.பி.ராதாகிருஷ்ணன் அனுமதி மறுத்து. அவர்கள் 7 பேரும் பா.ஜனதாவில் சேர ஒப்புதல் அளித்துவிட்டார். இதனால் மாநிலங்களவையில் பா.ஜனதா தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியின் பலம் 146 ஆகிவிட்டது. எனவே மூன்றில் இரண்டு பங்கு ஆதரவைப் பெற தேவையான 163 இடங்களை பா.ஜனதா நெருங்கிவிட்டது. இந்த 7 பேரில் ராகவ் சட்டா நாடாளுமன்றத்தில் ஆம் ஆத்மியின் முகமாக கருதப்பட்டார். அவர் பேசினால் இளைஞர்களைக் கவரும் வகையில் புயல் வீசுவது போல இருக்கும்.
இன்ஸ்டாகிராமில் அவரை ஒரு கோடியே 46 லட்சம் பேர் பின்தொடர்ந்த நிலையில், அவர் பா.ஜனதாவுக்கு தாவியவுடன் சுமார் 19 லட்சம் பேர் உடனடியாக அவரை பின்தொடர்வதில் இருந்து விலகிவிட்டனர். ஒரு பக்கம் ஆம் ஆத்மியை பலமிழக்கச் செய்வது, அடுத்த பக்கம் மாநிலங்களவையில் தனக்கு புதிய பலத்தை உருவாக்குவது என்ற இரட்டை முயற்சியில் பா.ஜனதா வெற்றி பெற்றுவிட்டது. அடுத்த முயற்சியாக பஞ்சாப்பில் நடக்கும் ஆம் ஆத்மி கட்சி ஆட்சியை கவிழ்க்கவும், அங்கிருந்து சில எம்.எல்.ஏ.க்களுக்கு கொக்கி போடப்பட்டு விட்டது என்றும் அரசியல் நோக்கர்கள் கூறுகிறார்கள்.