பொதுமக்கள் தங்களுக்கு ஒரு ஆபத்து என்றால், உடனடியாக தேடுவது போலீசாரைத்தான். தங்களுக்கு ஆபத்து மட்டுமல்ல, மற்ற சட்டம்-ஒழுங்கு பிரச்சினை எது ஏற்பட்டாலும் போலீசார்தான் ஆபத்பாந்தவனாக வரவேண்டும். தமிழ்நாட்டில் காவல்துறையில் போலீஸ் டி.ஜி.பி. முதல் போலீஸ்காரர்கள் வரை ஒரு லட்சத்து 31 ஆயிரத்து 491 பதவியிடங்கள் இருக்கின்றன. இதில் தற்போது 94 ஆயிரத்து 400 ஆண் காவலர்களும், 23 ஆயிரத்து 542 பெண் காவலர்கள் மட்டுமே பணியில் இருக்கிறார்கள். மீதியிடங்கள் காலியிடங்களாக இருக்கின்றன. மொத்தம் 1,352 போலீஸ் நிலையங்கள் உள்ளன. 202 பெண் போலீஸ் நிலையங்களும் இயங்குகின்றன. எனவே பொதுமக்களுக்கு ஏதாவது உதவிவேண்டும் என்றால், இந்த காவல் நிலையங்களையும், அதில் பணியாற்றும் காவலர்களையும்தான் அணுகவேண்டும். ஆனால் சம்பவம் நடக்கும் இடங்களிலிருந்து பொதுமக்கள் உடனடியாக தாங்கள் எந்த காவல் நிலையத்துக்கு செல்லவேண்டும்?, யாருடன் தொடர்புகொள்ளவேண்டும்? என்பதெல்லாம் முழுவதுமாக புரியாமல் திணறுகிறார்கள். தமிழக போலீஸ் டி.ஜி.பி. ஆக சைலேந்திரபாபு பதவியேற்றவுடன் பல அதிரடி நடவடிக்கைகளை எடுத்துவருகிறார். தற்போது கஞ்சாவை தமிழகத்திலிருந்து முழுமையாக ஒழிக்க கஞ்சா வேட்டை 2.0 என்ற பெயரில் மாநிலம் முழுவதும் போலீசார் மூலை முடுக்கெல்லாம் கஞ்சா வியாபாரிகளை விரட்டி, விரட்டி பிடிப்பது மிகவும் சிறப்புக்குரியதாக இருக்கிறது.
இந்தநிலையில் பொதுமக்கள் தங்கள் செல்போனில் இருந்தே ஏதாவது அவசரகாலங்களில் காவல்துறையின் உதவியை உடனடியாக பெறும்வகையில் 60-க்கும் மேற்பட்ட சிறப்பம்சங்களுடன் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பெயர் சூட்டிய காவல் உதவி செயலி என்ற புதிய செயலியை காவல்துறை உருவாக்கியுள்ளது. இதில் பொதுமக்கள் குறிப்பாக பெண்கள் அவசரகாலங்களில் அந்த செயலியில் இருக்கும் சிவப்புநிற அவசரம் என்ற பொத்தானை அழுத்தினால்போதும் அவர்கள் பற்றிய முழுவிவரமும் அடுத்தநொடியே அருகிலுள்ள காவல்நிலையத்துக்கு சென்றுவிடும். ஏனெனில் இந்த செயலியை தமிழிலும், ஆங்கிலத்திலும் பதிவேற்றும்போதே பொதுமக்கள் தங்கள் முகவரி, செல்போன் எண் உள்ளிட்ட அனைத்து தகவல்களையும் அதில் பதிவுசெய்து வைத்திருப்பார்கள். அதை அடிப்படையாக வைத்து அவசரம் என்ற பொத்தானை அழுத்தியவுடன் அவர்கள் பற்றிய விவரம் மட்டுமல்லாமல், அவர்களுடைய இருப்பிட விவரம் வீடியோ கட்டுப்பாட்டு அறையில் பெறப்பட்டு, அருகில் இருக்கும் போலீஸ் ரோந்து வாகனத்துக்கு தெரிவிக்கப்பட்டு, உடனடியாக அந்தவாகனம் அங்கு சென்று அவர்களுக்கு அவசர சேவையை வழங்கிவிடும்.
பயணநேரங்களின் போது அவர்கள் இருப்பிடத்தை பதிவுசெய்யும் வசதியிருப்பதால், தனியாக பயணம் செய்யும் பெண்கள் இந்த செயலி பதிவிறக்கம் செய்யப்பட்ட செல்போனை கையில் வைத்திருந்தால் போதும், தன்னுடன் துப்பாக்கியுடன் ஒரு போலீசார் பாதுகாப்பு இருக்கும் உணர்வோடு மிக தைரியமாக பயணம் செய்யமுடியும். மேலும் அவர்கள் அருகில் எந்த போலீஸ் நிலையம் இருக்கிறது என்பதை தெரிவித்து, அதற்கு வழிகாட்டும் ஜி.பி.எஸ். வசதியும் இந்த செயலியில் இடம்பெற்றுள்ளது. அவசர போலீசுக்கு புகார் கொடுக்கும் வசதி, செல்போன் மூலமாக புகார் அளிக்கும் வசதி, காவல் நிலைய இருப்பிடம் மற்றும் நேரடி அழைப்பு வசதி, காவல்துறை கட்டுப்பாட்டு அறை தொலைபேசி விவரம் உள்பட போலீசாரின் உதவி தேவைப்படும் எல்லா சேவைகளையும் இந்த காவல் உதவி செயலியில் பெற்றுவிடமுடியும். போலீஸ் உதவி மட்டுமல்லாது எரிவாயு கசிவு உதவிஎண், அமரர் ஊர்தி, தீயணைப்பு மற்றும் மீட்பு சேவை, சைபர் நிதி மோசடி தொடர்பான உதவிஎண், மகப்பேறு மற்றும் குழந்தைகள் நலன் என்று பல அவசர உதவி எண்கள் இந்த செயலியில் கொடுக்கப்பட்டு இருக்கிறது. போலீசாரின் சேவை உங்கள் உள்ளங்கையில் என்ற நிலையை இந்த காவல் உதவி செயலி வழங்குகிறது. இதை ஆண்ட்ராய்டு செல்போன் வைத்திருக்கும் எல்லோரும் எளிதில் பதிவிறக்கம் செய்துகொள்ளமுடியும். காவல் துறை வசதியை அளிக்கிறது. பயன்படுத்திக்கொள்வது இனி மக்களின் கையில்தான் இருக்கிறது.