தலையங்கம்

543 இடங்களிலேயே பெண்கள் இடஒதுக்கீடு

2029-ல் நடைபெற உள்ள நாடாளுமன்ற தேர்தலிலேயே பெண்கள் 33 சதவீத இடஒதுக்கீட்டை பெற்று அலங்கரிப்பார்கள்.

இந்தியா முழுவதும் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்திய நாடாளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கையை உயர்த்தவும். அதன் அடிப்படையில் பெண்களுக்கு 33 சதவீத இடஒதுக்கீட்டை அமலுக்கு கொண்டு வரவும் வகை செய்யும் அரசியல் சட்ட திருத்த மசோதா மிக மோசமான தோல்வியை சந்தித்தது. அதனால் அந்த மசோதாவோடு இணைத்து கொண்டு வரப்பட்ட தொகுதி வரையறை மசோதா மற்றும் யூனியன் பிரதேச சட்டங்கள் திருத்த மசோதாவை மத்திய அரசு உடனடியாக திரும்பப் பெற்றது.

கடந்த 2023-ம் ஆண்டே பெண்கள் இடஒதுக்கீடு மசோதா நிறைவேற்றப்பட்டாலும், உடனடியாக நடைமுறைக்கு கொண்டு வர முடியாது. ஏனென்றால், இந்த சட்டத்திலேயே 2021-ம் ஆண்டு நடத்தப்பட வேண்டிய மக்கள் தொகை கணக்கெடுப்பு முடிந்து அதன் தொடர்ச்சியாக நடத்தப்பட இருக்கும் தொகுதி வரையறைக்கு பிறகுதான் அமலுக்கு கொண்டு வர முடியும் என்று தெளிவாக கூறப்பட்டிருந்தது.

அதன்படி பார்த்தால், 2034 நாடாளுமன்ற தேர்தலில்தான் அமலுக்கு கொண்டு வரமுடியும். இந்தநிலையில், இதை எப்படியும் 2029 தேர்தலிலேயே கொண்டு வந்துவிட வேண்டும் என்பதற்காக மத்திய அரசு, மேற்கு வங்காளம், தமிழ்நாடு ஆகிய மாநிலங்களில் சட்டசபை தேர்தல் நடக்க இருக்கும் சூழ்நிலையில், சிறப்பு கூட்டத்தை கூட்டி 3 மசோதாக்களை தாக்கல் செய்தது. அந்த மசோதாக்கள்படி, மக்களவையில் தற்போது உள்ள 543 இடங்களை 850 வரை அதிகரிக்கவும், அப்படி அதிகரிக்கும் இந்த இடங்களில் பெண்களுக்கு 33 சதவீத இடஒதுக்கீடு வழங்குவதையும் அடிப்படை நோக்கமாகக் கொண்டு இருந்தது. இந்த மசோதாக்களுக்கு எதிர்க்கட்சிகள் தரப்பில் பலத்த எதிர்ப்பு கிளம்பியது. இது ஓட்டெடுப்பில் நன்றாக பிரதிபலித்தது.

இந்த மசோதாவுக்கு ஆதரவாக 298 உறுப்பினர்களும், எதிர்ப்பு தெரிவித்து 230 உறுப்பினர்களும் வாக்களித்தனர். அரசியல் சட்ட திருத்த மசோதாவுக்கு மூன்றில் இருபங்கு உறுப்பினர்களின் ஆதரவு இருக்க வேண்டும் என்ற நிலையில், 352 உறுப்பினர்கள் ஆதரவு இல்லாததால் படுதோல்வியடைந்தது. பிரதமர் மோடி தலைமையிலான பா.ஜனதாவின் 12 ஆண்டுகால ஆட்சியில் வாக்கெடுப்பில் மசோதா தோல்வி அடைந்தது இதுவே முதல்முறை ஆகும்.

Also read:மேலும் ஒரு மாநிலத்தில் பா.ஜ.க. ஆட்சி..!

ஏற்கனவே 2023-ல் நிறைவேற்றப்பட்ட பெண்கள் இடஒதுக்கீடு மசோதா, கடந்த 16-ந்தேதி இரவு அரசிதழில் வெளியிடப்பட்டுள்ளது. அதன் மூலம் அந்த மசோதா உயிரோட்டத்துடன்தான் இருக்கிறது. அதனால் இப்போது இருக்கும் 543 உறுப்பினர்களிலேயே 33 சதவீத பெண்கள் இட ஒதுக்கீடு கொண்டுவரவும் முடியும். எனவேதான் தி.மு.க. எம்.பி. வில்சன், முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினின் ஆலோசனையின்படி ஒரு தனிநபர் மசோதாவை தாக்கல் செய்திருந்தார்.

இந்த மசோதாப்படி, இனி புதிதாக தொகுதி வரையறையோ, மக்கள் தொகை கணக்கெடுப்போ நடத்த வேண்டிய அவசியம் இல்லாமல், இப்போது இருக்கிற 543 உறுப்பினர்களின் எண்ணிக்கையிலேயே பெண்களுக்கு 33 சதவீதம், அதாவது 169 பெண் உறுப்பினர்கள் இடம்பெற வழிவகை செய்கிறது. ஆக, நடக்காத ஒன்றுக்காக ஆசைப்படுவதை தவிர்த்துவிட்டு, இந்த கணக்குப்படியே இடஒதுக்கீட்டை கொண்டு வந்தால், 2029-ல் நடைபெற உள்ள நாடாளுமன்ற தேர்தலிலேயே பெண்கள் 33 சதவீத இடஒதுக்கீட்டை பெற்று அலங்கரிப்பார்கள்.

இந்த பிரச்சினைக்கு மிக எளிதான ஒரு தீர்வை காட்டியுள்ள தி.மு.க.வும், அதன் தலைவர் மு.க.ஸ்டாலினும் பாராட்டுக்குரியவர்கள்.