

எல்லோரிடமும் மூர்க்கத்தனமாக சண்டை போடுபவர்களை சண்டைக்கோழி என்று சொல்லும் வழக்கம் கிராமங்களில் உண்டு. உலகம் முழுவதும் பரவி வாழும் மக்கள் இப்போது அந்த பெயரை அமெரிக்க ஜனாதிபதி டிரம்புக்கு சூட்டியிருக்கிறார்கள். மீண்டும் ஜனாதிபதியாக பதவியேற்றதில் இருந்தே அனைத்து நாடுகள் மீதும் பாய்ந்து வருகிறார்.
இந்தியா உள்பட நட்பு நாடுகளையும் அவர் விட்டுவைக்கவில்லை. பொருளாதார போர், ஆயுத போர் என சர்வாதிகாரத்தின் உச்சத்தில் நின்று ஆடினார். அவருடன் நட்பு பாராட்டியவர்களெல்லாம் பகைவர்களாகிவிட்டார்கள். அந்த பட்டியலில் இப்போது 140 கோடி கத்தோலிக்க கிறிஸ்தவர்களின் தலைவராக விளங்கும் போப் ஆண்டவர் லியோவையும் சேர்த்துவிட்டார். இவ்வளவுக்கும் போப் ஆண்டவராக நியமிக்கப்பட்டுள்ள லியோ, முதல் அமெரிக்கர் ஆவார்.
இவர் உலகம் முழுவதிலும் உள்ள கிறிஸ்தவர்கள் மட்டுமல்லாமல், அனைத்து நாட்டு தலைவர்களாலும் போற்றப்படுகிறார். ஈரான் போர் குறித்து தன் கவலையை தெரிவித்த போப், கடந்த 5-ந்தேதி ஆயுதங்களை கீழே போடுமாறும், போரினால் நாகரிகங்களை அழிக்கும் செயலை நிறுத்தவேண்டும். போர் தொடுப்பவர்களின் பிரார்த்தனைகளை இறைவன் கேட்பதில்லை. அச்சுறுத்தல்கள் முற்றிலும் ஏற்றுக்கொள்ளமுடியாதவை. சர்வ வல்லமை படைத்தவர் என்ற அதிகாரம் காட்டுவதை நிறுத்துங்கள். போரை நிறுத்துங்கள் என்று டிரம்ப் பெயரை குறிப்பிடாமல் வேண்டுகோளை முன்வைத்தார்.
இது இலைமறை காயாக டிரம்பை குறிப்பிட்டு சொன்னது என்று உலகுக்கே தெரியும். இதை கேட்டவுடன் டிரம்பால் தாங்கிக்கொள்ள முடியவில்லை. போப் லியோ குற்றங்களை கட்டுப்படுத்துவதில் பலவீனமானவர். வெளியுறவு கொள்கையில் மிக மோசமாக செயல்படுகிறார். அவர் அமெரிக்காவை சேர்ந்தவர் என்பதால் மட்டுமே போப் ஆக தேர்ந்தெடுக்கப்பட்டார். நான் வெள்ளை மாளிகையில் இல்லையென்றால் போப் லியோ வாடிகனில் இருந்திருக்கமாட்டார். அமெரிக்கா, வெனிசுலாவை தாக்கியது தவறு என்று நினைக்கும் போப் எனக்கு தேவையில்லை.
இடதுசாரிகளுக்கு சேவை செய்வதை நிறுத்திவிட்டு கத்தோலிக்க திருச்சபையை வழிநடத்துவதில் கவனம் செலுத்தட்டும் என்று சமூக வலைத்தளத்தில் பதிவிட்டிருந்தார். இதைவிட ஒரு பாய்ச்சலில் முன்னோக்கி சென்று பைபிளில் குறிப்பிடப்பட்டிருக்கும் இயேசு கிறிஸ்து லாசரை உயிர்ப்பித்த அதிசயத்தை போன்று ஏ.ஐ.யில் ஒரு புகைப்படத்தை வெளியிட்டிருந்தார்.
அதில், தான் இயேசு நாதர் அணிந்திருந்ததுபோல நீண்ட அங்கியுடன், நோயாளியை ஆசீர்வதித்து குணப்படுத்துவதுபோல வெளியிட்ட படம் உலகம் முழுவதிலும் பெரிய கோப புயலை கிளப்பியது. இந்த கடும் எதிர்ப்பை தாங்கமுடியாமல் டிரம்ப் அந்த படத்தையே நீக்கிவிட்டார். ஆனால் போப் ஆண்டவர் இதற்கு சற்றும் அசரவில்லை. டிரம்ப் நிர்வாகத்தை கண்டு நான் அஞ்சவில்லை. ஏராளமான மக்கள் போரினால் அவதிப்படுகிறார்கள். அப்பாவி மக்கள் கொல்லப்படுகிறார்கள். யாராவது ஒருவர் இது சரியான வழி அல்ல என்று சொல்லித்தான் ஆகவேண்டும். அதைத்தான் நான் செய்கிறேன் என்று சரியான பதிலடி கொடுத்துள்ளார்.
ஆக மொத்தத்தில் ஈரானோடு மட்டுமல்லாமல், போப் ஆண்டவர் மீதும் டிரம்ப் கோப கணையை தொடுத்துவிட்டார். இதற்கு பலத்த எதிர்ப்புகள் கிளம்பியும் அவர் நிறுத்துவதாக தெரியவில்லை. ஈரானை தாண்டி போப் ஆண்டவர் மீது போர்க்கணையை திருப்பியிருப்பது உலகம் முழுவதும் உள்ள கிறிஸ்தவர்கள் இடையே டிரம்புக்கு கடுமையான எதிர்ப்பை சம்பாதித்து கொடுத்திருக்கிறது. ஒருபக்கம் ஈரான், மற்றொரு பக்கம் போப் ஆண்டவர் என்று இருமுனை தாக்குதலில் இப்போது டிரம்ப் தீவிரமாக இருக்கிறார்.