தலையங்கம்

தற்காலிகம் போதாது, நிரந்தரம் வேண்டும்

ஈரானின் நட்பு நாடான பாகிஸ்தான் இன்று அமெரிக்கா-ஈரான் இடையே பேச்சுவார்த்தைக்கு ஏற்பாடு செய்துள்ளது.

உலக பொருளாதாரத்தையே கடந்த 40 நாட்களாக ஆட்டம் காண வைத்த மேற்கு ஆசிய போர் இப்போது தற்காலிகமாக சில நாட்களுக்கு நிறுத்தம் செய்யப்படுகிறது என்ற முடிவு அனைவரையும் நிம்மதி பெருமூச்சு விட வைத்துள்ளது. கடந்த பிப்ரவரி மாதம் 28-ந்தேதி அமெரிக்காவும், இஸ்ரேலும் சேர்ந்து ஈரான் மீது தொடுத்த தாக்குதல்தான் அனைத்து பாதிப்புகளுக்கும் வாசலை திறந்தது.

அன்று ஈரானின் உச்சபட்ச தலைவர் அயதுல்லா அலி காமேனியும், அவரது குடும்பத்தினரும் மட்டுமல்லாமல் முக்கிய ராணுவ தளபதிகளையும் அமெரிக்கா 2,000 கிலோ மீட்டர் தூரத்தில் நிறுத்தி வைத்த கப்பலில் இருந்து துல்லியமாக குறி வைத்து ஏவிய ஏவுகணை அழித்தது. இதை கண்டு ஈரான் பயப்படவில்லை. ராணுவரீதியாக ஒருபக்கம் பதில் தாக்குதல்களை நடத்தினாலும், மற்றொருபக்கம் பொருளாதார போரையும் மேற்கொண்டுவிட்டது.

பாரசீக வளைகுடாவில் இருந்து ஓமன் மற்றும் இந்திய பெருங்கடலை இணைக்கும் ஹார்முஸ் நீரிணை வழியாக எந்த கப்பலும் போகக்கூடாது என்று தடைவிதித்தது. இதனால் பல நாடுகளுக்கு கச்சா எண்ணெய் மற்றும் எல்.பி.ஜி. மட்டுமல்லாமல் விவசாயத்துக்கு தேவையான உரத்தை ஏற்றிக்கொண்டு இந்தியா உள்பட பல்வேறு நாடுகளுக்கு செல்லவேண்டிய கப்பல்கள் எல்லாம் நடுக்கடலில் ஆங்காங்கு நிற்கவேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.

இந்தியாவை பொறுத்தமட்டில் நமக்கு தேவையான 90 சதவீத எல்.பி.ஜி.யும், 50 சதவீத கச்சா எண்ணெயும் இந்த ஹார்முஸ் நீரிணை வழியாகத்தான் வந்தாகவேண்டும். ஏதோ ராஜதந்திரத்தை பயன்படுத்தி இந்தியாவுக்கு வரவேண்டிய 4 கப்பல்களை இந்தியா பத்திரமாக கொண்டுவந்துவிட்டது. இந்த போருக்கு முன்னால் இந்தியாவுக்கு ஹார்முஸ் நீரிணை வழியாக 2 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய் வந்துக்கொண்டிருந்தது. இப்போது அது முழுமையாக வரமுடியாததால் பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

இன்னும் இந்தியாவுக்கு வரவேண்டிய 18 கப்பல்கள் கடலில் நிற்கின்றன. அதுபோல இந்தியாவில் இருந்து செல்லவேண்டிய பல கப்பல்களும் பயணத்தை தொடங்கமுடியாமல் இந்திய துறைமுகங்களில் நிற்கின்றன. வழியே தெரியாமல் அனைத்து நாடுகளும் தவித்துக்கொண்டு இருந்த நேரத்தில், நல்ல முடிவாக அமெரிக்காவும்-ஈரானும் போரை தற்காலிகமாக 2 வாரத்துக்கு முடிவுக்கு கொண்டுவரும் முடிவை எடுத்துள்ளன.

இதற்கு இரு நாடுகளும் சில நிபந்தனைகளையும் விதித்துள்ளன. ஆனால் இந்த போர் நிறுத்தம் தொடங்கி ஹார்முஸ் நீரிணை வழியை திறந்துவிட்ட சற்று நேரத்தில் இஸ்ரேல், லெபனான் மீது நடத்திய தாக்குதலில் பல உயிரிழப்புகள் ஏற்பட்டது.

இந்த போர் நிறுத்தம் லெபனான் மீது நடத்தும் தாக்குதலை கட்டுப்படுத்தாது என்று இஸ்ரேல் அறிவித்தவுடன் ஈரான் 24 மணி நேரத்துக்குள் மீண்டும் ஹார்முஸ் நீரிணையை மூடி அனைத்து நாடுகளையும் ஏமாற்றத்தின் உச்சிக்கு கொண்டு சென்றுவிட்டது. போர்நிறுத்தம் அறிவித்த உடனேயே கச்சா எண்ணெய் விலை 15 சதவீதம் உடனடியாக சரிந்துவிட்டது. பங்குச்சந்தையில் காளையின் ஆதிக்கம் மேலோங்கி உயர்வைக் கண்டது.

இந்த மகிழ்ச்சி நிலைத்து நிற்கவேண்டுமானால், தற்காலிக போர் நிறுத்தம் நிரந்தரமாக நீடிக்கவேண்டும். இந்த நிலையில் ஈரானின் நட்பு நாடான பாகிஸ்தான் இன்று அமெரிக்கா மற்றும் ஈரானுக்கு இடையே பேச்சுவார்த்தைக்கு ஏற்பாடு செய்துள்ளது. பாகிஸ்தான் தலைநகரான இஸ்லாமாபாத்தில் இந்த பேச்சுவார்த்தை நடந்து நல்ல முடிவு எட்டப்படுவதில்தான் தற்போதைய போர் நிறுத்தம் தற்காலிகமாக இருக்குமா? அல்லது அடுத்தக்கட்டத்துக்கு நகர்ந்து நிரந்தரமாக இருக்குமா? என்ற செய்தி உலகத்துக்கு கிடைக்கும்.