தலையங்கம்

தேர்தல் திருவிழா-நமது பெருமை

மொத்தம் 51 நாட்கள் தேர்தல் நடத்தை விதிகள் அமலில் இருக்கும்.

சென்னை,

இந்தியாதான், உலகிலேயே ஜனநாயகத்தின் தாயாக விளங்குகிறது. ஜனநாயகம் என்ற மரத்தின் ஆணிவேர் தேர்தல்தான். நாடாளுமன்ற தேர்தலும், சட்டமன்ற தேர்தலும் ஜனநாயக திருவிழாவாகத்தான் கொண்டாடப்படுகிறது. தற்போதைய தமிழ்நாடு சட்டசபையின் பதவிக்காலம் மே மாதம் 10-ந்தேதியோடும், கேரளா மே மாதம் 23-ந்தேதி, அசாம் மே 20-ந்தேதி, மேற்கு வங்காளம் மே 7-ந்தேதி, புதுச்சேரிக்கு ஜூன் 15-ந்தேதியோடும் முடிவடைகிறது. எனவே இந்த 4 மாநில சட்டசபைகளுக்கும், புதுச்சேரி சட்டசபைக்கும் தேர்தல் தேதியை தேர்தல் கமிஷன் அறிவித்துள்ளது. அந்தவகையில் அசாம், கேரளா, புதுச்சேரி சட்டசபைகளுக்கு ஏப்ரல் 9-ந்தேதியும், தமிழ்நாடு சட்டசபைக்கு ஏப்ரல் 23-ந்தேதியும், மேற்கு வங்காளத்துக்கு மட்டும் ஏப்ரல் 23 மற்றும் ஏப்ரல் 29-ந்தேதி என்று 2 கட்டங்களாகவும் தேர்தல் நடக்கிறது.

மேற்கு வங்காளத்தில் இதுவரை 6, 7, 8 என்று பல கட்டங்களாக தேர்தல் நடந்திருக்கும் நிலையில், இப்போதுதான் முதல் முறையாக 2 கட்டங்களாக 294 சட்டசபை தொகுதிகளுக்கும் தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. சட்டசபை தேர்தலை சந்திக்கும் 4 மாநிலங்களில் அசாம், கேரளாவில் 10 ஆண்டுகள் தொடர்ந்து ஆட்சியில் இருந்த கட்சிகளும், மேற்கு வங்காளத்தில் 15 ஆண்டுகள் தொடர்ந்து ஆட்சியில் இருந்த மம்தா பானர்ஜியும் களத்தில் குதிக்கிறார்கள். தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், முதல்-அமைச்சராக 2-வது முறையாக தேர்தலை சந்திக்கிறார். 4 சட்டசபைகளுக்கும், புதுச்சேரிக்கும் நடக்க இருக்கும் தேர்தல் முடிவுகள் மே 4-ந்தேதி வெளியிடப்படுகிறது. ஆக ஒரே நாளில் இந்த 4 மாநிலங்களிலும், புதுச்சேரியிலும் அடுத்த 5 ஆண்டுகளுக்கு ஆளப்போகும் கட்சியை ஒரு விரல் புரட்சி தீர்மானித்துவிடும். தமிழ்நாட்டில் நடக்கும் தேர்தல் ஒட்டுமொத்த நாட்டு மக்களின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.

ஆண்டிப்பட்டி தொகுதிக்கு உட்பட்ட மேற்கு தொடர்ச்சி மலையின் வெள்ளிமலை எஸ்டேட்டில் உள்ள வருசநாடு என்ற மலைப்பகுதியில் இருக்கும் 3 ஆண் வாக்காளர்கள், 2 பெண் வாக்காளர்கள் என 5 வாக்காளர்களுக்காக மட்டும் ஒரு வாக்குச்சாவடி அமைக்கப்பட்டுள்ளது. இந்த வாக்குச்சாவடிக்கு தேவையான ஓட்டுப்பதிவு எந்திரம் மற்றும் தேர்தல் பொருட்களை எடுத்துக்கொண்டு தேர்தல் ஊழியர்கள் கடினமான மலைப்பாதையில் 3 மணி நேரம் மிகவும் சிரமப்பட்டு நடந்து செல்லவேண்டிய நிலை இருக்கிறது. இவ்வளவு கஷ்டப்பட்டு 5 வாக்காளர்களுக்காக ஒரு வாக்குச்சாவடி அமைக்கப்பட்டுள்ளது இந்திய ஜனநாயகத்தின் வலிமையை காட்டுகிறது. தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ளதால், இனி தேர்தல் முடிவு அறிவிக்கப்படும் வரை மொத்தம் 51 நாட்கள் தேர்தல் நடத்தை விதிகள் அமலில் இருக்கும்.

இது அதிக நாட்கள் என்று எண்ணத் தோன்றினாலும், கடந்த 2021-ல் 66 நாட்கள், 2016-ல் 77 நாட்கள், 2011-ல் 74 நாட்கள் என தேர்தல் நடத்தை விதிகள் அமலில் இருந்திருக்கின்றன. தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்திருப்பதால் புதிய அறிவிப்புகளை அரசு வெளியிடமுடியாது. ரூ.50 ஆயிரத்துக்கு மேல் ஆவணமின்றி யாரும் எடுத்துச்செல்லமுடியாது. இது வியாபாரிகளுக்கு பெரும் இன்னலை கொடுத்துள்ளது. அனல் பறக்கும் சூறாவளி பிரசாரம் செய்ய அரசியல் கட்சிகளுக்கு 38 நாட்கள் அவகாசம் இருக்கிறது. மொத்தத்தில் இந்த தேர்தல் நடைமுறையின் வெற்றி என்பது அனைத்து வாக்காளர்களும் தங்கள் விரலால் வாக்குப்பதிவு எந்திரத்தின் பொத்தானை சுமுகமாக அழுத்துவதில்தான் இருக்கிறது. அதுதான் நமக்கு பெருமை.