தலையங்கம்

காலத்தால் செய்த உதவி

கடலில் காத்திருக்கும் 5 கப்பல்கள் இன்னும் சில நாட்களில் இந்திய துறைமுகங்களுக்கு வந்து சேர்ந்துவிடும்.

பொய்யாமொழி புலவரான அய்யன் திருவள்ளுவர், "காலத்தினால் செய்த நன்றி சிறிது எனினும் ஞாலத்தின் மாணப் பெரிது” என்றார். அது ஈரான் இந்தியாவுக்கு செய்த உதவியால் இப்போது நிரூபித்துக் காட்டப்பட்டுள்ளது. அமெரிக்கா-ஈரான் போர் வெடித்தபோது ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் நடந்த சர்வதேச கடற்படை கப்பல்களின் கூட்டு ஒத்திகையில் கலந்துவிட்டு, ஈரான் நாட்டு கப்பல்கள் தாயகம் திரும்பிக்கொண்டு இருந்தன. கடந்த 4-ந்தேதி இலங்கை கடல் பகுதியில் சென்றுக்கொண்டிருந்தபோது அமெரிக்க நீர்மூழ்கிக் கப்பல் நடத்திய ஏவுகணை தாக்குதலால் ஐரிஸ் தேனா என்ற கப்பல் மூழ்கடிக்கப்பட்டு, அதில் இருந்த 87 வீரர்கள் கண்ணீர் கடலில் ஜல சமாதியானார்கள். அந்த கப்பலோடு ஐரிஸ் லாவன் மற்றும் ஐரிஸ் புஷெர் என்ற கப்பல்கள் சென்றுக்கொண்டிருந்தன.

ஆபத்துக்கு உதவுபவன்தான் உண்மையான நண்பன் என்பதுபோல உடனடியாக இந்திய கடற்படை கப்பல்கள் அங்கு விரைந்தன. 2 ஈரானிய கப்பல்களையும் கொச்சி துறைமுகத்திற்கு வாருங்கள், நாங்கள் அடைக்கலம் தருகிறோம் என்று இந்தியா அழைப்பு விடுத்தது. அதன்பேரில் ஐரிஸ் லாவன் கப்பல் இன்றளவும் இந்தியாவின் விருந்தாளியாக கொச்சி துறைமுகத்தில் நிறுத்தப்பட்டுள்ளது. அடுத்த கப்பல் இலங்கையில் உள்ள திரிகோணமலையில் இருக்கிறது.

இத்தகைய சூழ்நிலையில்தான் ஈரானுக்கு சொந்தமான பாரசீக வளைகுடாவையும், ஓமன் வளைகுடாவையும் இணைக்கும் 52 கிலோமீட்டர் ஹார்முஸ் நீரிணை வழியாக எந்த கப்பல் போக்குவரத்தும் இருக்கக்கூடாது என்று தடை செய்துவிட்டது. இதனால் இந்தியாவுக்கு வந்து போய்க்கொண்டு இருந்த கப்பல்கள் அந்த வழியாக போக முடியாமல் நடுக்கடலில் நிற்கவேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.

அந்த கப்பல்கள் மூலம்தான் எல்.பி.ஜி. சிலிண்டர்கள், கச்சா எண்ணெய், உரம் போன்ற பல அத்தியாவசிய பொருட்கள் இந்தியாவுக்கு வரவேண்டும் என்பதால், இந்தியா பல இடர்பாடுகளை சந்தித்துக்கொண்டிருக்கிறது. இந்த இக்கட்டான சூழ்நிலையிலும் இந்திய கொடி கட்டிய ஜக் வசந்த், பைன் கியாஸ், ஷிவாலிக், நந்தா தேவி ஆகிய கப்பல்களை ஹார்முஸ் நீரிணை வழியாக செல்ல ஈரான் அனுமதித்தது.

இப்போது மேலும் உதவும் வகையில், சீனா, ரஷியா, இந்தியா, ஈராக், பாகிஸ்தான் ஆகிய எங்கள் நட்பு நாடுகளின் கப்பல்கள் ஹார்முஸ் நீரிணை வழியாக செல்ல அனுமதித்துள்ளோம் என்ற நல்ல செய்தியை ஈரான் வெளியுறவுத்துறை மந்திரி அப்பாஸ் அராக்சி அறிவித்துள்ளார். இது காய்ந்த பயிர்களை மழை உச்சி குளிர வைப்பது போன்றதாகும். அதேநேரத்தில் எதிரி நாடுகளுடன் தொடர்புடைய கப்பல்களை அனுமதிக்கமாட்டோம் என்று திட்டவட்டமாக ஈரான் தெரிவித்துள்ளது.

போரின் நடுவே துளிர்விட்ட இந்த அறிவிப்பினால் கடலில் நின்றுக்கொண்டிருக்கும் 20 கப்பல்கள் உடனடியாக இந்தியாவுக்கு வரமுடியும். இந்தியாவில் இருந்து காலி சிலிண்டர்களை ஏற்றிக்கொண்டு அந்தந்த நாடுகளுக்கு செல்லவேண்டிய 18 கப்பல்களும் பயணத்தை தொடரமுடியும். ஈரான் பச்சை கொடி காட்டியிருப்பதால், 2.3 லட்சம் டன் எல்.பி.ஜி.யை வைத்துக்கொண்டு கடலில் காத்திருக்கும் 5 கப்பல்கள் இன்னும் சில நாட்களில் இந்திய துறைமுகங்களுக்கு வந்து சேர்ந்துவிடும். ஈரானின் இந்த நன்றி மறவாத செயல் மிகவும் பாராட்டுக்குரியது. ஈரானோடு, தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தி வழக்கமான கப்பல் போக்குவரத்தை மீண்டும் தொடங்கி எல்.பி.ஜி. சிலிண்டர், கச்சா எண்ணெய், உரம் தட்டுப்பாடு இல்லாத சூழ்நிலையை உருவாக்குவது இனி மத்திய அரசின் கையில்தான் இருக்கிறது.