தலையங்கம்

பொதுமக்களுக்கு ஏன் இந்த தண்டனை?

அரசுக்குத்தான் கஷ்டம் என்றால் பொதுமக்களுக்கும் தேர்தல் நடத்தை விதிகளால் இடர்பாடுகள் அதிகரித்துள்ளது.

தமிழ்நாடு, புதுச்சேரி உள்பட 5 மாநிலங்களில் சட்டசபை தேர்தல் அறிவிப்பை தேர்தல் கமிஷன் வெளியிட்டுள்ளதால், நடத்தை விதிகளும் உடனடியாக அமலுக்கு வந்துவிட்டன. அரசு கொள்கை சார்ந்த எந்த முடிவுகளும் எடுக்கமுடியாது. இப்போது நிர்வாக கட்டுப்பாடு தேர்தல் கமிஷனின் கைக்கு போய்விட்டது. மேற்கு வங்காளத்தில் தலைமைச்செயலாளர், போலீஸ் டி.ஜி.பி., கொல்கத்தா மாநகர போலீஸ் கமிஷனர் என்று உயர் அதிகாரிகள் மாற்றப்பட்டுள்ளனர். தமிழ்நாட்டிலும் 4 மாவட்ட போலீஸ் சூப்பிரண்டுகளை தேர்தல் கமிஷன் மாற்றிவிட்டது. இந்த பட்டியல் இன்னும் தொடர்ந்து, மேலும் பல அதிகாரிகள் மாற்றப்படுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அரசுக்குத்தான் கஷ்டம் என்றால் பொதுமக்களுக்கும் தேர்தல் நடத்தை விதிகளால் இடர்பாடுகள் அதிகரித்துள்ளது.

ரூ.50 ஆயிரத்துக்கு மேல் ரொக்கமாக கையில் எடுத்து சென்றால் தேர்தல் கமிஷனின் பறக்கும் படையினர் சோதனை போடும்போது கண்டுபிடிக்கப்பட்டால் பறிமுதல் செய்யப்படும். பிறகு உரிய ஆவணங்களை தாக்கல் செய்தால் மட்டுமே பல நாட்களுக்கு பிறகு அந்த பணம் கிடைக்கும். ஏனென்றால் அதிகாரிகள் பணத்தை கைப்பற்றியவுடன் அரசு கருவூலத்தில் கட்டி விடுவார்கள். திருப்பூர் மாவட்டம் பல்லடம்-உடுமலை ரோட்டில் சித்தம்பலம் பகுதியில் பறக்கும் படையினர் வாகன சோதனையில் ஈடுபட்டுக்கொண்டிருந்தனர். அப்போது தனது மாமியாரை கோவையில் உள்ள ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக அழைத்துச்சென்ற ஒருவர் அதற்காக கைவசம் வைத்திருந்த ரூ.2 லட்சத்தை, பறக்கும் படையினர் கைப்பற்றியவுடன் அந்த பெண்ணின் மகள் நந்தினி கதறி அழுத படம் தினத்தந்தியில் நேற்று பிரசுரமாகியிருந்தது. இந்த படம் பார்ப்பவர்களின் கண்களையும் குளமாக்கியது.

இதுபோல சாகுபடி காலம் என்பதால் விவசாயிகள் உரம் வாங்கவும், விவசாய வேலைகளுக்காகவும் ரூ.50 ஆயிரத்துக்கு மேல் ரொக்கமாக கொண்டுசெல்வார்கள். அதுவும் இப்போது முடியாது என்றால் விவசாய பணிகளை தள்ளிவைக்கவா முடியும்?, பணத்தை ரொக்கமாக எடுத்து செல்லமுடியாத சூழ்நிலையால் மாட்டு சந்தைகளே வெறிச்சோடியிருக்கிறது. திருமண சீசன் என்பதால் தங்கத்தில் ½ பவுன் தாலி வாங்கவேண்டும் என்றால் கூட ரூ.60 ஆயிரம் எடுத்துச்செல்ல வேண்டியது உள்ளது. அதை பிடித்துவிட்டார்கள் என்றால் தாலி வாங்க சென்று ஒன்றும் வாங்காமல் காலியாக வரும் நிலை ஏற்பட்டுவிடும். காய்கறி விற்பனை செய்யும் சிறு வியாபாரிகள் தினசரி கொள்முதலுக்காக ரூ.50 ஆயிரத்துக்கு மேல் எடுத்துக்கொண்டு மார்க்கெட்டுக்கு போவார்கள். உயர்க்கல்விக்கான மாணவர் சேர்க்கையும் தொடங்கியிருக்கிறது.

ரூ.50 ஆயிரம் உச்சவரம்பு என்பது சில ஆண்டுகளுக்கு முன்பு தேர்தல் ஆணையத்தால் நிர்ணயிக்கப்பட்டது. அப்போதைய ரூ.50 ஆயிரம் மதிப்பு இப்போது ரூ.1 லட்சத்தையும் தாண்டியிருப்பது தேர்தல் கமிஷனுக்கு தெரியாதா? அரசியல் கட்சிகள் வாக்காளர்களுக்கு பணம் கொடுப்பதை தடுப்பதற்காகவும், அதனால் பண நடமாட்டத்தை கட்டுப்படுத்துவதற்காகவும்தான் சோதனை என்ற பெயரில் இந்த நடவடிக்கை எடுக்கப்படுவதாக தேர்தல் கமிஷன் கூறுகிறது. ஆனால் இதில் அத்தியாவசிய தேவைக்காக பணத்தை எடுத்து செல்லும் அப்பாவி மக்களின் பணத்தை பறிமுதல் செய்வதை பார்க்கும்போது பொதுமக்களுக்கு ஏன் இந்த தண்டனை? என்றுதான் கேட்க தோன்றுகிறது. ரொக்கம் மட்டுமல்ல டிஜிட்டல் பரிவர்த்தனை, வங்கி பரிவர்த்தனைகளும் கண்காணிக்கப்படும் என்று பயம் காட்டுகிறார்கள். தேர்தல் திருவிழா ஆனந்தமாக இருக்கவேண்டியதற்கு பதிலாக பதற்றத்துடனேயே கழிக்கவேண்டிய நிலையை ஏற்படுத்தியிருப்பதால், மக்கள் மனதில் தேர்தல் நடத்தை விதிகள் மகிழ்ச்சியை தரவில்லை.