காட்டுத்தீ பரவும் அபாயம்
நீலகிரி மாவட்டத்தில் கடந்த ஆண்டு தென்மேற்கு மற்றும் வடகிழக்கு பருவமழை போதிய அளவு பெய்யவில்லை. இதன்காரணமாக மாவட்டம் முழுவதும் உள்ள நீர்நிலைகள் வறண்டு உள்ளதால் பொதுமக்களுக்கு குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டு உள்ளது. மேலும் வனப்பகுதிகளும் பசுமை இழந்து காணப்படுகின்றன. இதனால் உணவு மற்றும் குடிநீர் தேடி வனவிலங்குகள் குடியிருப்பு மற்றும் விவசாய நிலங்களில் புகுந்து அட்டகாசம் செய்து வருகின்றன.
மேலும் வனப்பகுதியில் உள்ள புற்கள் மற்றும் புதர்செடிகள் வறட்சியால் கருகி காணப்படுகிறது. இதனை பயன்படுத்தி சமூக விரோத கும்பல்கள் இரவு நேரத்தில் வனப்பகுதிக்கு தீ வைத்து விட்டு தலைமறைவாகி விடுகிறார்கள். இதனால் வனப்பகுதிகளில் காட்டுத்தீ பரவி சிறு வன உயிரினங்கள், அரிய வகை தாவரங்கள் எரிந்து சாம்பலாகி வருகிறது. எனவே ஒவ்வொரு ஆண்டும் வனத்துறை சார்பில் தீத்தடுப்பு கோடுகள் அமைக்கப்பட்டு வருகின்றன.
பைக்காரா வனப்பகுதி
ஊட்டி அருகே உள்ள பைக்காரா வனப்பகுதி முக்கியமானதாக உள்ளது. இந்த வனப்பகுதிகளில் தீத்தடுப்பு கோடுகள் அமைக்கும் பணி தற்போது மும்முரமாக நடைபெற்று வருகிறது. ஊட்டி பிங்கர்போஸ்ட் முதல் பைக்காரா வரை சுமார் 10 கிலோ மீட்டர் தூரத்திற்கு சாலையின் இருபுறமும் குறிப்பிட்ட தூரத்திற்கு புற்கள் மற்றும் புதர்செடிகள் வெட்டி அகற்றப்பட்டு வனத்துறை சார்பில் தீவைத்து எரிக்கப்படுகின்றன. இதன் மூலம் காட்டுத்தீ ஏற்படும் அபாயம் குறைக்கப்படுகிறது.
இதேபோல் ஊட்டி-கூடலூர் சாலையில் இருந்து கிளன்மார்கன் பகுதிக்கு செல்லும் சாலையின் இருபுறமும் சுமார் 15 கிலோ மீட்டர் தூரத்திற்கு தீத்தடுப்பு கோடுகள் அமைக்கப்படுகிறது.
இந்த பணியில் வனத்துறை ஊழியர்கள் மட்டுமின்றி சூட்டிங்மட்டம் பகுதியில் கடை வைத்து உள்ள வியாபாரிகள், சூழல் மேம்பாட்டு குழுவினரும் ஈடுபட்டு வருகிறார்கள்.