மாவட்ட செய்திகள்

கருங்கல் அருகே பரிதாபம் ஜவுளிக்கடை உரிமையாளர் தற்கொலை போலீஸ் விசாரணை

கருங்கல் அருகே தொழிலில் நஷ்டம் ஏற்பட்டதால் ஜவுளிக்கடை உரிமையாளர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தினர்.

கருங்கல்,

குமரி மாவட்டம் கருங்கல் அருகே மங்கலகுன்று ஆயிரவிளை பகுதியை சேர்ந்தவர் ஏசுதாஸ். இவருடைய மகன் அபீஷ் (வயது 21). இவர் தெருவுக்கடை பகுதியில் ஜவுளிக்கடை நடத்தி வந்தார். தொழிலில் நஷ்டம் ஏற்பட்டதால் அபீசுக்கு அதிக கடன் ஏற்பட்டது. வாங்கிய கடனை திருப்பி கொடுக்க முடியாமல் அவதிப்பட்டு வந்தார்.

இதனால் கடந்த சில நாட்களாக மனமுடைந்த நிலையில் காணப்பட்டு வந்த அபீஷ், தனது முகநூல் பக்கத்தில் தொழில் நஷ்டத்தால் தற்கொலை செய்து கொள்ளப்போவதாக பதிவு செய்து அதை நண்பர்களுக்கு அனுப்பி வந்தார். அவருக்கு நண்பர்களும், குடும்பத்தினரும் ஆறுதல் கூறி வந்தனர்.

நேற்று முன்தினம் உறவினர் வீட்டு நிகழ்ச்சிக்கு தனது நண்பர்களுடன் அபீஷ் சென்றார். பின்னர், வீடு திரும்பிய அபீஷ், திடீரென மயங்கி விழுந்தார். இதனால், அதிர்ச்சி அடைந்த குடும்பத்தினரும், நண்பர்களும் அவரை மீட்டு கருங்கலில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள் அபீஷ் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். அபீஷ் விஷம் குடித்து தற்கொலை செய்தது தெரியவந்தது.

தகவல் அறிந்த கருங்கல் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ரெகுபாலாஜி மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று அபீசின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். தொழிலில் ஏற்பட்ட நஷ்டத்தால் ஜவுளிக்கடை உரிமையாளர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.