மாவட்ட செய்திகள்

வால்பாறையில் கிறிஸ்தவ ஆலயங்களில் குருத்தோலை ஞாயிறு பவனி

வால்பாறையில் உள்ள கிறிஸ்தவ ஆலயங்களில் குருத்தோலை ஞாயிறு பவனி நடந்தது.

வால்பாறை,

ஏசு கிறிஸ்து சிலுவையில் அறையப்பட்டு 3-ம் நாள் உயிர்த் தெழுந்த தினத்தை கிறிஸ்தவர்கள் ஈஸ்டர் பண்டிகையாக கொண்டாடி வருகிறார்கள். இந்த ஈஸ்டர் பண்டிகை வருகிற 4-ந் தேதி கொண்டாடப்படுகிறது.

ஏசு கிறிஸ்து சிலுவையில் அறையப்படுவதற்கு முன்பு, கழுதை குட்டியின் மீது ஏறி எருசலேமுக்கு வந்தார் என்றும், அப்போது உடன் சென்றவர்கள் குருத்தோலைகளை ஏந்தியபடி ஓசன்னா... ஓசன்னா என்று ஆர்ப்பரித்தபடி சென்றதாக கிறிஸ்தவர்களின் புனித நூலான பைபிள் கூறுகிறது.

அந்த குருத்தோலை ஞாயிறு ஈஸ்டர் பண்டிகைக்கு முந்தைய ஞாயிற்றுக்கிழமை வருகிறது.

கிறிஸ்தவர்கள் பவனி

குருத்தோலை ஞாயிறு என்பதால் அனைத்து கிறிஸ்தவ ஆலயங்களில் சிறப்பு பிரார்த்தனை நடந்தது. வால்பாறையில் உள்ள கிறிஸ்தவ ஆலயங்களிலும் நேற்று காலை சிறப்பு பிரார்த்தனை நடந்தது.

வழக்கமாக முக்கிய வீதிகள் வழியாக கிறிஸ்தவர்கள் கைகளில் குருத்தோலைகளை ஏந்தியபடி பவனி செல்வார்கள்.

ஆனால் கொரோனா பாதிப்பு காரணமாக முக்கிய வீதிகள் வழியாக பவனி செல்லவில்லை. அதற்கு பதிலாக ஆலய வளாகத்திலேயே அவர்கள் பவனி சென்றனர்.

சிறப்பு பிரார்த்தனை

வால்பாறை சி.எஸ்.ஐ. ஆலயத்தில் ஆயர் ஜெயராஜ் தலைமை யில் குருத்தோலை பவனி நடந்தது. இதில் கலந்து கொண்ட கிறிஸ்தவர்கள் தங்கள் கைகளில் குருத்தோலைகளை ஏந்தியபடி ஓசன்னா பாடி பவனியாக வந்தனர். அதன் பின்னர் சிறப்பு பிரார்த்தனையும் நடந்தது.

அதுபோன்று வால்பாறை தூய இருதய கத்தோலிக்க ஆலயத்தில் பங்கு குருக்கள் மரியஜோசப், மரியபினிட்டோ தலைமையில் பவனி நடைபெற்றது.

முடீஸ் புனித அந்தோணியார் ஆலயத்தில் பங்குகுரு மரிய அந்தோணிசாமி, அய்யர்பாடி புனித வனத்துச் சின்னப்பர் ஆலய பங்குகுரு ஆனந்த குமார், சோலையார் நகர் புனித சூசையப்பர் ஆலய உதவி பங்குகுரு ரஞ்சித் ஆகியோர் தலைமையிலும் குருத்தோலை பவனி நடந்தது.

மேலும் பொள்ளாச்சி, ஆனைமலை மற்றும் அதைச்சுற்றி உள்ள அனைத்து பகுதிகளிலும் உள்ள கிறிஸ்தவ ஆலயங்களிலும் குருத்தோலை பவனி மற்றும் சிறப்பு பிரார்த்தனைகள் நடந்தன.