மயிலாடுதுறை:
உக்ரைன் நாட்டில் சிக்கி தவிக்கும் மயிலாடுதுறை மருத்துவ மாணவியை பாதுகாக்கக்கோரி கலெக்டரிடம் பெற்றோர் மனு அளித்துள்ளனர்.
குண்டு வீசி தாக்குதல்
மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுகா கொடைவிளாகம் ஊராட்சி கோவாஞ்சேரி கிராமத்தில் விவசாயி ஆனந்தன்-கவிதா ஆகியோரின் மகள் ஆர்த்திகா (வயது 23). இவர் உக்ரைன் நாட்டில் ரஷியா எல்லைக்கு அருகில் உள்ள கார்கியூ பகுதியில் உள்ள ஒரு மருத்துவ பல்கலைக்கழகத்தில் 5-ம் ஆண்டு மருத்துவம் பயின்று வருகிறார். உக்ரைன் மீது ரஷியா போர் தொடுத்து வரும் நிலையில் 3-ம் நாளான நேற்று உச்சகட்ட போரை தொடுத்து வருகிறது.
இன்று (நேற்று) கார்கியூ பகுதியில் தாக்குதல் நடைபெறுவதாகவும், தாங்கள் தங்கியுள்ள கார்கிவ் ஹீரோயிவ் பிரட்சி அகாடெமிகா பாவியோவா தெரு அருகாமையில் உள்ள கட்டிடத்தின் மீது குண்டு வீசி தாக்குதல் நடைபெற்றதாக மயிலாடுதுறை மாவட்ட மாணவி ஆர்த்திகா அவரது பெற்றோரிடம் தெரிவித்துள்ளார். புகை மண்டலமாக உள்ள காட்சிகளை தனது பெற்றோர்களுக்கு அனுப்பியுள்ளார். தன்னுடன் தமிழ்நாட்டை சார்ந்த 5 மாணவிகள் உள்பட 500-க்கும் மேற்பட்ட மாணவர்கள் சிக்கிகொண்டுள்ளதாகவும், கல்லூரியில் 4 ஆயிரத்திற்கு மேற்பட்ட தமிழக மாணவர்கள் படிப்பதாகவும் கூறும் மாணவி ஆர்த்திகா மின்சாரம், குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதுடன் கையிருப்பு உள்ள சாப்பாடும் வெகு சொற்ப அளவே உள்ளது.
நடவடிக்கை எடுக்க வேண்டும்
பகலில் மெட்ரோ சுரங்க பாதையில் பதுங்கியுள்ளதாகவும், இரவு தங்கள் வசிக்கும் பகுதிக்கு திரும்புவதாகவும் தெரிவிக்கின்றனர். தாங்கள் வசிக்கும் எதிர்திசைக்கு சென்றால்தான் போலந்து நாட்டிற்கு செல்ல முடியும் என்றும் முதலில் தங்களை பாதுகாப்பான இடத்திற்கு அழைத்து செல்ல நடவடிக்கை எடுக்குமாறு பெற்றோர்களிடம் கண்ணீர் மல்க தெரிவித்துள்ளார்.
இந்திய தூதரகத்தை தொடர்பு கொண்டால் சரியான பதில் இல்லை என்றும் தூதரக எண்ணை தொடர்பு கொண்டால் மெயில் அனுப்ப சொல்வதாகவும் மெயில் அனுப்பியும் நடவடிக்கை இல்லை என்றும் மாணவிகள் கூறுகின்றனர். ஆர்த்திகாவின் பேச்சை கேட்டு அதிர்ச்சியடைந்த பெற்றோர்கள் நேற்று மயிலாடுதுறை மாவட்ட கலெக்டர் லலிதாவை நேரில் சந்தித்து, உக்ரைனில் சிக்கி தவிக்கும் தன் மகள் மற்றும் உடன் உள்ள மாணவிகளை முதலில் பாதுகாப்பான இடத்திற்கு கொண்டு செல்ல மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை மனு அளித்துள்ளனர்.