மும்பை,
மும்பை கேட்வே ஆப் இந்தியா மற்றும் பாவுச்சா தக்கா பகுதியில் இருந்து தினமும் ஆயிரக்கணக்கான மக்கள் ராய்காட் மாவட்டம் அலிபாக்கில் உள்ள மாந்த்வா பகுதிக்கு சென்று வருகின்றனர். இதில் பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் படகுகள் மூலம் மும்பை- மாந்த்வா இடையே சென்று வருகின்றனர்.
இந்தநிலையில் மும்பை-அலிபாக் இடையே பயணிகள் மற்றும் வாகனங்கள் கொண்டு செல்லும் வகையிலான கப்பல் போக்குவரத்து நேற்று தொடங்கப்பட்டது. கப்பல் சேவையை மத்திய கப்பல் போக்குவரத்து துறை இணை மந்திரி மன்சுக் மாண்டாவியா தொடங்கி வைத்தார்.
மும்பை பாவுச்சா தக்கா- அலிபாக்கில் உள்ள மாந்த்வா இடையே இந்த கப்பல் இயக்கப்படும். இதற்காக பாவுச்சா தக்காவில் ரூ.31 கோடி செலவிலும், மாந்த்வாவில் ரூ.135 கோடியிலும் கப்பல் நிறுத்தம் அமைக்கப்பட்டுள்ளது.
மும்பை- அலிபாக் இடையே இயக்கப்படும் ரோபக்ஸ்' ரக கப்பல் கிரீஸ் நாட்டில் கட்டப்பட்டதாகும். இதில் 1,000 பயணிகளுடன் 200 காகளையும் கொண்டு செல்ல முடியும். மேலும் இந்த கப்பலை மழைக்காலத்தில் கூட இயக்க முடியும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது.