மதுரை,
தேனியைச் சேர்ந்த வக்கீல் ராஜா, மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில், பெரியகுளம் முன்சீப் கோர்ட்டில் ஆரிப் ரகுமான் என்பவர் அரசு வக்கீலாக நியமிக்கப்பட்டு உள்ளார். அவர் மீது பல்வேறு குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளன. எனவே அவரை அரசு வக்கீலாக நியமித்ததை ரத்து செய்ய வேண்டும் என்று கூறியிருந்தார்.
இந்த வழக்கை தனி நீதிபதி விசாரித்து, அரசு வக்கீலாக நியமிக்கப்படுபவர்கள் நேர்மை மற்றும் நன்னடத்தையுடன் இருப்பது அவசியம். இது பற்றி விசாரித்து அதன்பின்பு தகுதியின் அடிப்படையில் அந்த பதவியில் நியமிக்க வேண்டும். அந்த வகையில் பெரியகுளம் முன்சீப் கோர்ட்டின் அரசு வக்கீலாக ஆரிப் ரகுமானை நியமித்த அரசாணை ரத்து செய்யப்படுகிறது என உத்தரவிட்டார்.
இதை எதிர்த்து ஆரிப் ரகுமான் மதுரை ஐகோர்ட்டு டிவிஷன் பெஞ்சில் மேல்முறையீடு செய்தார்.இந்த மேல்முறையீட்டு மனுவை நீதிபதிகள் பரேஷ் உபாத்யாய், விஜயகுமார் ஆகியோர் விசாரித்தனர்.
அப்போது அரசு வக்கீல் ஆஜராகி, சட்டம் மற்றும் விதிகளை பின்பற்றியே முறைப்படி அரசு வக்கீலாக மனுதாரர் நியமிக்கப்பட்டார். அதில் எந்த விதிமீறலும் இல்லை என வாதாடினார்.
இதையடுத்து ஆரிப் ரகுமான் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை நீதிபதிகள் ஏற்றுக்கொண்டனர். அவரை அரசு வக்கீலாக நியமித்ததை ரத்து செய்த தனி நீதிபதி உத்தரவை ரத்து செய்து நீதிபதிகள் உத்தரவிட்டனர். மேலும் அரசு நியமனத்திற்கு எதிராக மனு தாக்கல் செய்த வக்கீல் ராஜாவின் மனுவை தள்ளுபடி செய்ததுடன் ரூ.25 ஆயிரம் அபராதம் விதித்து உத்தரவிட்டனர்.