மாவட்ட செய்திகள்

குழந்தைகளை வேலைக்கு அனுப்பினால் பெற்றோருக்கு ரூ.10 ஆயிரம் அபராதம்

குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பாமல் வேலைக்கு அனுப்பும் பெற்றோர்களுக்கு ரூ.10 ஆயிரம் அபராதம் விதிக்கப்படும் என்று கலெக்டர் எச்சரித்து உள்ளார்.

சிவகங்கை,

குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பாமல் வேலைக்கு அனுப்பும் பெற்றோர்களுக்கு ரூ.10 ஆயிரம் அபராதம் விதிக்கப்படும் என்று கலெக்டர் எச்சரித்து உள்ளார்.

விழிப்புணர்வு கூட்டம்

சிவகங்கை மாவட்ட அளவில் கொத்தடிமை தொழிலாளர் ஒழிப்பு விழிப்புணர்வு கூட்டம், சிவகங்கை கலெக்டர் அலுவலகத்தில் கலெக்டர் மதுசூதன்ரெட்டி தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் கலெக்டர் பேசியதாவது.:-

கடந்த 2021-ஆம் ஆண்டில் 6 சிறுவர்கள் உள்பட 9 கொத்தடிமைத் தொழிலாளர்கள் மீட்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு உடனடி நிவாரணத் தொகையாக தலா ரூ.20 ஆயிரம் வீதம் ரூ.1 லட்சத்து 80 ஆயிரம் வழங்கப்பட்டுள்ளது. மீட்கப்பட்ட குடும்பத்திற்கு அரசின் நலத்திட்ட உதவிகளான குடும்ப அட்டை, சலவைப் பெட்டி, சலவை வண்டி ஆகியவை வழங்கப்பட்டுள்ளது. மேலும், மீட்கப்பட்ட சிறுவர்கள் தற்போது பள்ளியில் சேர்க்கப்பட்டு படித்து வருகின்றனர்.

14 குழந்தை தொழிலாளர்கள் மீட்பு

2021-ம் ஆண்டில் சிவகங்கை மாவட்ட குழந்தை தொழிலாளர் முறை எதிர்ப்பு ஆய்வுக்குழு மூலம் 14 வயதிற்குட்பட்ட 11 குழந்தைத் தொழிலாளர்களும், 2022-ஆம் ஆண்டில் 3 குழந்தைத் தொழிலாளர்களும் கண்டறியப்பட்டு மீட்கப்பட்டுள்ளனர். மீட்கப்பட்ட 14 குழந்தைத் தொழிலாளர்களும் பள்ளிகளில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

மேற்கண்ட 14 சிறுவர்களை பணிக்கு அமர்த்திய 14 கடை நிறுவன உரிமையாளர்கள் மீது சிவகங்கை, காரைக்குடி, திருப்பத்தூர், சிங்கம்புணரி, தேவகோட்டை ஆகிய நீதிமன்றங்களில் வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

ரூ.10 ஆயிரம் அபராதம்

குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பாமல் வேலைக்கு அனுப்பும் பெற்றோர்களுக்கும் ரூ.10 ஆயிரம் அபராதம் விதிக்கப்படும். சிவகங்கை மாவட்டத்தில் குழந்தை தொழிலாளர் எவரும் பணிபுரிவது கண்டறியப்பட்டால் தகவல் தரலாம்.

இவ்வாறு அவர் கூறினார்.

கூட்டத்தில் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு சார்பு நீதிபதி பரமேஸ்வரி, மாவட்ட வருவாய் அலுவலர் மணிவண்ணன், வருவாய் கோட்டாட்சியர்கள் முத்துகழுவன் (சிவகங்கை), பிரபாகரன் (தேவகோட்டை), கூடுதல் போலீஸ்சூப்பிரண்டு வெற்றிசெல்வன், சிவகங்கை மகளிர் திட்டஇயக்குனர் வானதி, சிவகங்கை ஊரக வளர்ச்சி முகமை உதவி திட்ட இயக்குனர் செல்வி, தொழிலாளர் உதவி ஆணையர் (அமலாக்கம்) ராஜ்குமார், மாவட்ட சமூக நல அலுவலர் அன்புகுளோரியா, மாவட்ட ஆதிதிராவிட நல அலுவலர் மங்களநாதன், குழந்தைகள் நலக்குழுத் தலைவர் சாந்தி, மற்றும் பலர் கலந்து கொண்டனர்.