மாவட்ட செய்திகள்

மனைவியை கண்டுபிடித்து தரக்கோரி தவறான தகவலுடன் வழக்கு தொடர்ந்தவருக்கு ரூ.25 ஆயிரம் அபராதம்

மனைவியை கண்டுபிடித்து தரக்கோரி தவறான தகவலுடன் வழக்கு தொடர்ந்தவருக்கு ரூ.25 ஆயிரம் அபராதம் விதித்து மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டு உள்ளது.

மதுரை,

மனைவியை கண்டுபிடித்து தரக்கோரி தவறான தகவலுடன் வழக்கு தொடர்ந்தவருக்கு ரூ.25 ஆயிரம் அபராதம் விதித்து மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டு உள்ளது.

மனு தாக்கல்

திருச்சி, வரகநேரியைச் சேர்ந்த ஜெகன் (வயது 23), மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில், என்னுடன் கல்லூரியில் படித்த புதுக்கோட்டையைச் சேர்ந்த பெண்ணை காதலித்தேன். நாங்கள் வெவ்வேறு சமுதாயத்தைச் சேர்ந்தவர்கள் என்பதால் அவரது பெற்றோர் எங்கள் காதலை ஏற்கவில்லை. இதனால் கடந்த மார்ச் மாதம் திருச்சியில் உள்ள கோவிலில் திருமணம் செய்து கொண்டோம். என் மனைவி கர்ப்பமானார்.

பின்னர் அவரது பெற்றோர் தற்கொலை செய்து கொள்வோம் என கூறியதால் அவர்களது வீட்டுக்கு சென்றார். அங்கிருந்து செல்போனில் பேசிய என் மனைவி, அவரை ஆணவக்கொலை செய்து விடுவோம் என உறவினர்கள் மிரட்டுவதாக கூறினார். அதன்பின் அவரை தொடர்பு கொள்ள முடியவில்லை.

என் மனைவியை சட்டவிரோதமாக தடுத்து வைத்து ஆணவக்கொலை செய்ய திட்டமிட்டுள்ளனர். அவரை கண்டுபிடிக்க அறந்தாங்கி அனைத்து மகளிர் போலீசார் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே, என் மனைவியை கண்டுபிடித்து ஆஜர்படுத்த உத்தரவிட வேண்டும் என கூறியிருந்தார்.

தவறான தகவல்

இந்த மனு ஏற்கனவே விசாரணைக்கு வந்தபோது, அரசு தரப்பில், போலீசில் அளித்த புகாரில் இருவரும் காதலிப்பதாகவும், திருமணம் செய்ய திட்டமிட்டுள்ளதாகவும் கூறியிருந்தார். ஆனால், கோர்ட்டில் தாக்கல் செய்த பிரமாண பத்திரத்தில் இருவரும் திருமணம் செய்து கொண்டதாக தவறான தகவலை தெரிவித்துள்ளார்.

எனவே, கோர்ட்டில் தவறான தகவலை தெரிவித்ததாக அவர் மீது அறந்தாங்கி போலீஸ் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது என தெரிவிக்கப்பட்டது.

இந்தநிலையில் இந்த மனு நீதிபதிகள் வைத்தியநாதன், ஜெயச்சந்திரன் ஆகியோர் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது.

அபராதம்

அப்போது நீதிபதிகள், மனுதாரர் இந்த கோர்ட்டின் நேரத்தை வீணடித்துள்ளார். அவரது மனு தள்ளுபடி செய்யப்படுகிறது. மேலும் அவருக்கு ரூ.25 ஆயிரம் அபராதம் விதிக்கப்படுகிறது. இந்த தொகையை சட்டப்பணிகள் ஆணைக்குழுவிற்கு செலுத்த வேண்டும் என்று உத்தரவிட்டனர்.

==========