மாவட்ட செய்திகள்

மான் கொம்பு வைத்திருந்தவருக்கு ரூ.20 ஆயிரம் அபராதம்

கடலாடி அருகே மான் கொம்பு வைத்திருந்தவருக்கு ரூ.20 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.

சாயல்குடி,

கடலாடி அருகே புரசங்குளம் கிராம சாலை பகுதியில் கடலாடி போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அங்கு நின்றிருந்த காரை சோதனையிட்டனர். அதில் மான் கொம்பு மற்றும் அரிவாள் இருந்தது தெரியவந்தது. உடனடியாக சாயல்குடி வனச்சரக அலுவலகத்திற்கு கடலாடி போலீசார் தகவல் அளித்து கார் மற்றும் மான் கொம்பை அவர்களிடம் ஒப்படைத்தனர். மாவட்ட வன அலுவலர் பகான் ஜெகதீசன் சுதாகர் அறிவுறுத்தலின்படி வனச்சரக அலுவலர் ஆறுமுகம், வனவர் அன்புசெல்வம், வனக்காப்பாளர் ஜீவானந்தம் ஆகியோர் விசாரணை மேற்கொண்டதில் கடலாடி அருகே புரசங்குளம் கிராமத்தைச் சேர்ந்த மாயழகு (வயது53) என்பவரின் கார் என்பது தெரியவந்தது. அவர் நேரில் வனச்சரக அலுவலகத்தில் ஆஜராகி தான் கடலாடி பகுதியில் மாடு மேய்த்துக் கொண்டிருந்ததாகவும் அப்போது அங்கு கீழே கிடந்த மான் கொம்பை காரில் எடுத்து வைத்திருந்ததாகவும் ஒப்புக்கொண்டார். அவரிடம் ரூ.20 ஆயிரம் பிணை தொகை வசூலிக்கப்பட்டது. மான் கொம்பை வனச்சரக அலுவலர்கள் பறிமுதல் செய்தனர்.