திருச்சி
திருச்சி மாவட்டத்தில் கொரோனா மற்றும் ஒமைக்ரானை கட்டுப்படுத்தும் விதமாக மாநகர போலீசார் பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக நேற்று முழு ஊரடங்கையொட்டி திருச்சி மாநகரில் 8 சோதனை சாவடிகள் அமைக்கப்பட்டு தீவிர வாகன தணிக்கை செய்யப்பட்டது. இரண்டு மற்றும் நான்கு சக்கர வாகனங்களில் வருவோரை நிறுத்தி விசாரணை நடத்தினர்.
இதன் ஒரு பகுதியாக மோட்டார் வாகன இன்ஸ்பெக்டர் முகமதுமீரான், தமிழ்நாடு போக்குவரத்து கழக துணை மேலாளர் (வணிகம்) சதீஷ்குமார், துணை மேலாளர் (இயக்ககம்) கார்த்திகேயன் மற்றும் திருச்சி அனைத்து மகளிர் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஆனந்த வேதவள்ளி ஆகியோர் வாகன தணிக்கையில் ஈடுபட்டு கொண்டிருந்தனர்.
அபராதம்
அப்போது திருச்சி ரெயில்வே ஜங்சன் பகுதியில் ஊரடங்கு உத்தரவை மீறி ஒரு ஆம்னி பஸ் வந்தது. அந்த ஆம்னி பஸ்சை தடுத்து நிறுத்தி விசாரணை செய்தனர். அப்போது அந்த ஆம்னி பஸ் தஞ்சையில் இருந்து பெங்களூருவில் உள்ள ஒரு ஐ.டி கம்பெனியில் வேலைக்கு ஊழியர்களை அைழத்து சென்றது தெரியவந்தது. பின்னர் அந்த ஆம்னி பஸ் டிரைவருக்கு ரூ.10 ஆயிரம் அபராதம் விதித்தனர். இதேபோல் திருச்சி ஒத்தக்கடை சிக்னல் அருகே கண்டோன்மெண்ட் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் அகிலா தலைமையில் வாகன தணிக்கையில் ஈடுபட்டபோது அந்த வழியாக அனுமதியின்றி வந்த 2 ஆம்னி பஸ்களை தடுத்து நிறுத்தி அதற்கு ரூ.20 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.
550 பேர் மீது வழக்கு
மேலும் மாநகரில் முககவசம் அணியாமல் வந்த வியாபாரிகள், பொதுமக்கள் என 550 பேர் மீது வழக்குகள் பதிவு செய்யப்பட்டு ரூ.1 லட்சத்து 75ஆயிரம் அபராதம் வசூலிக்கப்பட்டது, மேலும் ஊரடங்கு உத்தரவை மீறியவாகள் மீது வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, சமூக இடைவெளியின்றி செயல்பட்டவர்கள் மீது 30 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, ரூ.15 ஆயிரம் அபராத தொகையாக வசூலிக்கப்பட்டுள்ளது. தடையை மீறி சாலைகளில் வந்த வாகனங்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.