மாவட்ட செய்திகள்

களை இழந்த தஞ்சை மாவட்ட சுற்றுலா தலங்கள்

தஞ்சை மாவட்டத்தில் காணும் பொங்கல் நாளில் சுற்றுலா தலங்கள் மக்கள் நடமாட்டமின்றி களை இழந்து காணப்பட்டது

தஞ்சாவூர்:-

தஞ்சை மாவட்டத்தில் காணும் பொங்கல் நாளில் சுற்றுலா தலங்கள் மக்கள் நடமாட்டமின்றி களை இழந்து காணப்பட்டது.

காணும் பொங்கல் விழா

தமிழர்களின் திருநாளான பொங்கல் பண்டிகை கடந்த 14-ந்தேதி கொண்டாடப்பட்டது. அன்று அதிகாலையில் குளித்து புத்தாடை அணிந்து புதுப்பானையில் புத்தரிசி பொங்கலிட்டு கதிரவனுக்கு படைத்து வழிபட்டார்கள். இதையடுத்து மறுநாள் மாட்டுப்பொங்கல் அன்று மாடுகளை குளிப்பாட்டி, அலங்கரித்து படையலிட்டு வழிபட்டார்கள்.

நேற்று காணும்பொங்கல் பண்டிகை கொண்டாடப்பட்டது. கன்னிப்பொங்கல் என்றும், கணுப்பண்டிகை என்றும் அழைக்கப்படும் காணும் பொங்கல் அன்று உற்றார், உறவினர், நண்பர்களை சந்திப்பது, பெரியோர்களிடம் ஆசி பெறுவது சிறப்பம்சமாகும்.

சுற்றுலா தலங்களில் கூடுவார்கள்

காணும் பொங்கல் அன்று வீடுகளில் சமையல் செய்து உணவு வகைகளை பாத்திரங்களில் எடுத்துக்கொண்டு தங்களுக்கு பிடித்தமான இடங்கள் மற்றும் சுற்றுலா தலங்களுக்கு செல்வார்கள். அங்கு தங்களது குடும்பத்தினருடன் கூட்டம், கூட்டமாக அமர்ந்து உணவு அருந்தி மகிழ்ச்சியுடன் கொண்டாடுவார்கள்.

தஞ்சை மாவட்டத்தில் பெரியகோவில், சிவகங்கை பூங்கா, ராஜராஜன் மணிமண்டபம், கல்லணை, மனோரா உள்ளிட்ட சுற்றுலா தலங்கள், ஆற்றங்கரை போன்ற இடங்களில் காணும் பொங்கல்அன்று மக்கள் கூட்டம் அதிகமாக காணப்படும்.

களையிழந்தது

ஆனால் இந்த ஆண்டு கொரோனா காரணமாக நேற்று முழு ஊரடங்கு அமலில் இருந்ததாலும், வழிபாட்டு தலங்களுக்கு பக்தர்கள் செல்ல தடை விதிக்கப்பட்டதாலும் காணும் பொங்கல் அன்று சுற்றுலா தலங்கள் மக்கள் நடமாட்டமின்றி களையிழந்து காணப்பட்டது.

மக்கள் வீடுகளிலேயே முடங்கினர். இதனால் வழக்கமான உற்சாகம் இன்றி காணப்பட்டது. பெரிய கோவில் வளாகம் வெறிச்சோடி இருந்தது. கொரோனா கட்டுப்பாடுகள் காரணமாக புகழ் பெற்ற பூண்டிமாதா பேராலயத்தில் மக்கள் அனுமதிக்கப்படவில்லை.

கல்லணை

காணும் பொங்கல் என்றாலே கல்லணை களைகட்டும். கல்லணை பாலத்தில் நின்றபடி தண்ணீர் வெளியேறும் அழகை ரசிப்பது, ஆற்றில் இறங்கி குளித்து மகிழ்வது என மக்கள் குதூகலிப்பார்கள். ஆனால் இந்த ஆண்டு கொரோனா தொற்று மக்களின் உற்சாகத்தை குலைத்து விட்டது. கல்லணையில் நேற்று ஆட்கள் நடமாட்டமே இல்லை.

கல்லணையில் உள்ள கரிகால சோழன் மணிமண்டபம், பூங்கா பூட்டப்பட்டு இருந்தது.

சுவாமிமலை

சுவாமிமலை பகுதியில் வழக்கமாக காணும் பொங்கல் அன்று கலை நிகழ்ச்சிகள், விளையாட்டு போட்டிகள் நடைபெறும். கொரோனா பரவல் எதிரொலியாக முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதால் சுவாமிமலை பகுதியில் நேற்று காணும் பொங்கல் கொண்டாட்டங்கள் நடைபெறவில்லை. மக்கள் கூடுவதை தடுக்க கிராம பகுதியில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். ஆற்றங்கரை பகுதியில் தடுப்புகள் அமைத்து இருந்தனர். சுவாமிமலை போலீஸ் இன்ஸ்பெக்டர் மகாலட்சுமி மற்றும் போலீசார் ரோந்து மேற்கொண்டனர்.