மாவட்ட செய்திகள்

பெட்ரோல், டீசல், பால் விலை உயர்வை மத்திய, மாநில அரசுகள் உடனே திரும்ப பெற வேண்டும்

பெட்ரோல், டீசல், பால் விலை உயர்வை மத்திய, மாநில அரசு உடனே திரும்ப பெற வேண்டும் என்று இந்திய கம்யூனிஸ்டு கட்சி கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

நன்னிலம்,


இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் நன்னிலம் ஒன்றிய நிர்வாக குழு கூட்டம் பேரளத்தில் நடந்தது. கூட்டத்திற்கு நிர்வாகி செந்தில் தலைமை தாங்கினார். ஒன்றிய செயலாளர் கவுதமன் கலந்து கொண்டு பேசினார்.

கூட்டத்தில் கீழ்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன:-

மத்திய, மாநில அரசுகள் பெட்ரோல், டீசல் விலையையும், அத்தியாவசிய உணவு பொருளான பால் விலையையும் உயர்த்தி உள்ளதால் பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். எனவே பெட்ரோல், டீசல், பால் விலை உயர்வை மத்திய, மாநில அரசுகள் உடனே திரும்ப பெற வேண்டும். நன்னிலம் ஒன்றியத்தில் உள்ள பல ஊராட்சிகளில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்பு திட்டத்தில் வேலை செய்த தொழிலாளர்களுக்கு பல மாதங்களாக ஊதியம் வழங்கப்படவில்லை. எனவே ஊதிய நிலுவைத்தொகை அனைத்தையும் தொழிலாளர்களுக்கு உடனே வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

இதில் நிர்வாகக்குழு உறுப்பினர்கள் கோவிந்தன், கண்ணையன், அல்போன்ஸ், ராமமூர்த்தி, சேகர், வெங்கடாசலம், ரமேஷ் உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் ஒன்றிய துணைச் செயலாளர் சேகர் நன்றி கூறினார்.