மாவட்ட செய்திகள்

திருச்சியின் வரலாறு குறித்த புகைப்பட கண்காட்சி மாணவ–மாணவிகள் பார்வையிட்டனர்

திருச்சியின் வரலாறு குறித்த புகைப்பட கண்காட்சியை மாணவ–மாணவிகள் ஆர்வமுடன் பார்வையிட்டனர்.

திருச்சி,

பெரியார் ஈ.வெ.ரா.கல்லூரி வரலாற்றுத்துறை சார்பில் திருச்சியின் வரலாறு என்ற தலைப்பில் புகைப்பட கண்காட்சி நேற்று நடந்தது. தொடக்க நிகழ்ச்சிக்கு கல்லூரி முதல்வர் சாந்தா ராபின்சன் தலைமை தாங்கினார். சிறப்பு விருந்தினராக கல்லூரி இயற்பியல்துறைத்தலைவர் பொன்னன் கலந்து கொண்டார். வரலாற்றுத்துறை தலைவர் கருணா செஸ்ட்லெட் வாழ்த்தி பேசினார்.

கண்காட்சியில் வரலாற்றுத்துறை மாணவமாணவிகள் சேகரித்த திருச்சியை பற்றிய அரிய புகைப்படங்களான பழங்கால கோவில்கள், மசூதிகள், கிறிஸ்தவ தேவாலயங்கள், திருச்சியில் வாழ்ந்த முக்கிய பிரமுகர்கள், அவர்கள் வாழ்ந்த வீடு, நினைவு சின்னங்கள், கோவில் கல்வெட்டுகள், சிற்பங்கள், அரசு அருங்காட்சியகம், ராணிமங்கம்மாள் காலத்தில் கட்டப்பட்ட கட்டிடங்கள் உள்பட ஏராளமான புகைப்படங்களும், அது பற்றிய சிறு குறிப்புகளும், அரிய தகவல்களும் இடம் பெற்று இருந்தன.

கண்காட்சியின் நோக்கம் குறித்து வரலாற்றுத்துறை பேராசிரியர் சேவியர் கூறுகையில், வரலாற்றுத்துறை மாணவமாணவிகளிடம் சேகரிக்கும் திறனை அதிகரிக்கும் நோக்கில் இந்த கண்காட்சி நடத்தப்படுகிறது. மேலும், கண்காட்சியில் இந்த மாவட்டத்துக்கு திருச்சிராப்பள்ளி என்று பெயர் வந்ததற்கான ஆதாரமான கல்வெட்டு மலைக்கோட்டையில் உள்ளது. அந்த புகைப்படமும் இடம் பெற்று உள்ளது என்றார். இந்த கண்காட்சியினை மாணவமாணவிகள் ஆர்வமுடன் பார்வையிட்டனர். நிகழ்ச்சியில் முன்னதாக மாணவர் மணிகண்டன் வரவேற்றார். முடிவில் மாணவி ஜெயந்தி நன்றி கூறினார்.