மும்பை,
நடுவானில் பறந்த போது என்ஜின் செயலிழந்த விமானம் மும்பை விமான நிலையத்தில் தரையிறக்கம் செய்யப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
பத்திரமாக தரையிறக்கம்
டாடா குழுமத்துக்கு சொந்தமான ஏர் இந்தியா 'ஏ320நியோ' விமானம் நேற்று காலை 9.43 மணி அளவில் பயணிகளுடன் மும்பை சத்ரபதி சிவாஜி விமான நிலையத்தில் இருந்து பெங்களூருக்கு புறப்பட்டது. இந்த விமானம் நடுவானில் பறந்து கொண்டு இருந்தபோது, அதன் ஒரு என்ஜின் திடீரென செயலிழந்தது. புறப்பட்ட 27 நிமிடத்திலேயே இந்த சம்பவம் நேர்ந்தது. இதையடுத்து விமானிகள் சாதுர்யமாக செயல்பட்டு விமானத்தை தரையிறக்க முடிவு செய்தனர்.
கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் கொடுத்து, விமானத்தை திருப்பி மும்பை விமான நிலையத்திலேயே அவசரமாக தரையிறக்கினர்.
பயணிகள் நிம்மதி
இதன் பிறகே பயணிகள் நிம்மதி பெருமூச்சு விட்டனர். பயணிகள் அனைவரும் மாற்று விமானத்தில் பெங்களூருவுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
சம்பவம் குறித்து ஏர் இந்தியா செய்தி தொடர்பாளரிடம் கேட்டபோது, "ஏர் இந்தியா பாதுகாப்புக்கு முன்னுரிமை அளிக்கிறது, எங்கள் பணியாளர்கள் இக்கட்டான சூழ்நிலைகளை கையாள்வதில் திறமையானவர்கள். எங்கள் பொறியியல் மற்றும் பராமரிப்பு குழுக்கள் உடனடியாக இந்த சிக்கலை ஆராயத் தொடங்கின" என்றார்.
இந்த சம்பவம் தொடர்பாக விமான போக்குவரத்து ஒழுங்குமுறை இயக்குனரகம் விசாரணை நடத்தி வருவதாக வட்டாரங்கள் தெரிவித்தன.