மாவட்ட செய்திகள்

தேசிய வாக்காளர் தினத்தையொட்டி கலெக்டர் தலைமையில் அலுவலர்கள் உறுதிமொழி ஏற்பு

தேசிய வாக்காளர் தினத்தையொட்டி தர்மபுரியில் கலெக்டர் திவ்யதர்சினி தலைமையில் அலுவலர்கள் உறுதிமொழி ஏற்று கொண்டனர்.

தர்மபுரி:

தேசிய வாக்காளர் தினத்தையொட்டி தர்மபுரியில் கலெக்டர் திவ்யதர்சினி தலைமையில் அலுவலர்கள் உறுதிமொழி ஏற்று கொண்டனர்.

தேசிய வாக்காளர் தினம்

இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி ஆண்டுதோறும் ஜனவரி மாதம் 25-ந் தேதி தேசிய வாக்காளர் தினம் கடைபிடிக்கப்படுகிறது. அதன்படி 12-வது தேசிய வாக்காளர் தினம் தர்மபுரி மாவட்டத்தில் முககவசம் அணிந்து, சமூக இடைவெளியை கடைபிடித்து, அரசின் வழிக்காட்டு நெறிமுறைகளை பின்பற்றி சிறப்பாக கொண்டாடப்பட்டது.

தர்மபுரி கலெக்டர் அலுவலக வளாகத்தில் தேசிய வாக்காளர் தினத்தையொட்டி உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு கலெக்டரும், மாவட்ட தேர்தல் அலுவலருமான திவ்யதர்சினி தலைமை தாங்கினார். மாவட்ட வருவாய் அலுவலர் அனிதா, சமூக பாதுகாப்பு திட்ட தனி துணை கலெக்டர் சாந்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

நற்சான்றிதழ்

இந்த நிகழ்ச்சியில் கலெக்டர் தேசிய வாக்காளர் தின உறுதிமொழி வாசிக்க கலெக்டர் அலுவலகத்தில் பணிபுரியும் அனைத்து துறை அலுவலர்கள், பணியாளர்கள் உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர். பின்னர் நடந்த 12-வது தேசிய வாக்காளர் தின விழா நிகழ்ச்சியில் வாக்காளர் சிறப்பு சுருக்க திருத்தம் - 2022 பணிகளை சிறப்பாக மேற்கொண்ட 7 வாக்குச்சாவடி நிலை அலுவலர்களுக்கு நற்சான்றிதழ்களை கலெக்டர் வழங்கினார்.

இந்த நிகழ்ச்சியில் கலால் உதவி ஆணையர் தணிகாசலம், மாவட்ட வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு அலுவலர் ஜெயக்குமார், ஊராட்சிகள் உதவி இயக்குநர் சீனிவாச சேகர், மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் நாராயணன், மாவட்ட கருவூல அலுவலர் சுப்பிரமணியன், தேர்தல் தனி தாசில்தார் சுகுமார் மற்றும் அரசு அலுவலர்கள், பணியாளர்கள் கலந்து கொண்டனர்.

அரசு கல்லூரி

பாப்பிரெட்டிப்பட்டி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் தேசிய வாக்காளர் தின உறுதிமொழி ஏற்பு விழா நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு கல்லூரி முதல்வர் கார்த்திகேயன் தலைமையில் பேராசிரியர்கள், மாணவர்கள் உறுதி மொழி எடுத்து கொண்டனர். இதில் பெரியார் பல்லை கழக ஆட்சி குழு உறுப்பினர் செந்தில்குமார், பேராசிரியர்கள், நிர்வாக பணியாளர்கள் கலந்து கொண்டனர். முடிவில் நாட்டு நலப்பணி திட்ட அலுவலர் ரமேஷ் நன்றி கூறினார்.