மாவட்ட செய்திகள்

திருப்பத்தூரில் பா.ம.க. சார்பில் ஆர்ப்பாட்டம்

திருப்பத்தூரில் பா.ம.க. சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

திருப்பத்தூர்

திருப்பத்தூர் மாவட்ட பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் திருப்பத்தூர் ரயில் நிலையம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட செயலாளர்கள் ஏ.பி.சிவா, பாலு ஆகியோர் தலைமை வகித்தனர். மாநில துணைத் தலைவர் பொன்னுசாமி, மாநில மகளிரணி அமைப்பாளர் நிர்மலா ராஜா, முன்னாள் எம்.எல்.ஏ. நடராஜன் முன்னிலை வகித்தனர். கண்டன ஆர்ப்பாட்டத்தை முன்னாள் எம்.எல்.ஏ. டி.கே.ராஜா தொடங்கி வைத்து பேசினார்.

திருப்பத்தூர் ரயில் நிலையத்தில் இருந்து கே.ஆர்.புரம், பெங்களூரு, கிருஷ்ணகிரி, ஓசூர் வழியாக செல்லும் ரயில் பாதையை ஆய்வு செய்து உடனடியாக பாதை அமைக்க வேண்டும், திருப்பத்தூர்-நகரி, திண்டிவனம்- திருவண்ணாமலை, சென்னை மாமல்லபுரம்- கடலூர், தருமபுரி- மொரப்பூர் உள்ளிட்ட வழித்தடங்களில் உடனடியாக ரயில்களை இயக்க வேண்டும், திருப்பத்தூரில் அனைத்து ரயில்களும் நின்று செல்ல வேண்டும், திருப்பத்தூர் ஜங்ஷன் என குறிப்பிட்டு பெயர் பலகை வைக்க வேண்டும், திருப்பத்தூர்-திருவண்ணாமலை ரயில் பாதை அமைக்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன கோஷங்களை எழுப்பினர். பின்னர் ரயில்வே மேலாளரிடம் மனு அளித்தனர்.

ஆர்ப்பாட்டத்தில் குட்டிமணி, கராத்தே சிவா, கனகராஜ், நகராட்சி கவுன்சிலர் டி.கே. முத்தமிழ், வக்கீல் பூபதி உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர். முடிவில் மாவட்ட தலைவர் கணபதி நன்றி கூறினார்.