கொடைரோடு:
போலீஸ் தம்பதி
தமிழகம் முழுவதும் கொரோனா வைரஸ் தொற்று தீவிரமாக பரவி வருவதால் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.
இதனால் ஏழை எளிய நடுத்தர மக்கள் வேலை இழந்து, வருமானம் இல்லாமல் தவித்து வருகின்றனர்.
சாலையோரம் தங்கியுள்ள ஆதரவற்றவர்களுக்கு தன்னார்வலர்கள் தினமும் 3 வேளை உணவுகளை வழங்கி வருகின்றனர்.
இவர்களுக்கு ஒருபடி மேலே சென்று ஆதரவற்றவர்களுக்கு அரிசி, காய்கறிகள், மளிகை பொருட்களை போலீஸ் தம்பதியினர் வழங்கிய நெகிழ்ச்சி சம்பவம் ஒன்று அரங்கேறியுள்ளது.
திண்டுக்கல் மாவட்டம் கொடைரோடு அருகே உள்ள கல்லடிப்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் அன்பழகன்.
இவரது மனைவி செல்வரத்தினம். அம்மையநாயக்கனூர் போலீஸ் நிலையத்தில் அன்பழகனும், விளாம்பட்டி போலீஸ் நிலையத்தில் செல்வரத்தினமும் போலீஸ் ஏட்டுக்களாக பணிபுரிந்து வருகின்றனர்.
ஆதரவற்றவர்களுக்கு உதவி
இவர்கள் தங்கள் சம்பளத்தில் வீட்டு செலவு போக, மீதி பணத்தை கொரோனா ஊரடங்கால் பாதிக்கப்பட்ட ஆதரவற்றவர்களுக்கு உதவி செய்ய முடிவு செய்தனர்.
இதையடுத்து அம்மையநாயக்கனூரில் உள்ள தனியார் முதியோர் இல்லம், பள்ளபட்டி அருகேயுள்ள மனவளர்ச்சி குன்றியோர் காப்பகம் ஆகியவற்றிற்கு போலீஸ் தம்பதியினர் நேற்று நேரில் சென்றனர்.
அங்கு முதியோர்கள், மாணவ-மாணவிகள் என 150 பேருக்கு ஒரு மாதத்திற்கு தேவையான 10 மூட்டை அரிசி, மளிகை பொருட்கள், காய்கறிகள் ஆகியவற்றை வழங்கினர்.
பின்னர் முதியவர்களுக்கும், மாணவ, மாணவிகளுக்கும் அவர்கள் முக கவசத்தை அணிவித்தனர்.
கொரோனா ஊரடங்கு காலத்தில் ஆதரவற்றோருக்கு உதவிய போலீஸ் தம்பதியினரை அந்த பகுதி மக்கள் மற்றும் போலீசார் பாராட்டினர்.