கூடலூர்
கூடலூர் எல்லையில் அய்யப்ப பக்தர்களை போலீசார் தடுத்து நிறுத்தினார்கள். அவர்கள் அங்கு பல மணி நேரம் தவித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
அய்யப்ப பக்தர்கள்
தமிழகம், கேரளா, கர்நாடகா என 3 மாநிலங்கள் இணையும் இடத்தில் கூடலூர் உள்ளது. கேரள மாநில மக்களுக்கு தேவை யான அத்தியாவசிய பொருள்கள் பெரும்பாலும் கர்நாடகா மாநிலத்தில் இருந்து கூடலூர் வழியாக லாரிகளில் கொண்டு செல்லப்படுகிறது.
இதேபோல் கர்நாடகா உள்பட வெளிமாநிலங்களில் இருந்து ஏராளமான அய்யப்ப பக்தர்கள் கூடலூர் வழியாக சபரிமலைக்கு சென்று வருகின்றனர். கொரோனா பரவல் காரணமாக பல்வேறு கட்டுப்பாடுகள் அமல்படுத்தப் பட்டு உள்ளது.
போலீசார் தடுத்து நிறுத்தினர்
இந்த நிலையில் நேற்று முழு ஊரடங்கையொட்டி கூடலூரில் போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது சபரிமலைக்கு சென்றுவிட்டு பக்தர்கள் கார்கள் மற்றும் வேன்களில் கூடலூர் வழியாக கர்நாடகாவை நோக்கி சென்றனர்.
அவர்கள் கேரளா- கூடலூர் எல்லையான நாடுகாணி சோதனைச் சாவடிக்கு வந்தபோது அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் அய்யப்ப பக்தர்களின் வாகனங்களை தடுத்து நிறுத்தினர். முழு ஊரடங்கு என்பதால் கூடலூருக்குள் வாகனங்களை இயக்க அனுமதிக்க முடியாது. எனவே வந்த வழியாக திரும்பி செல்லுமாறு போலீசார் தெரிவித்தனர்.
சாலையில் பரிதவிப்பு
அப்போது அவர்கள் கூடலூர் வழியாக கர்நாடகாவுக்கு சென்று விடுவதாகவும், வழியில் எங்கும் வாகனங்களை நிறுத்துவது இல்லை என்றும் தெரிவித்தனர். இருந்தபோதிலும் அவர்கள் செல்ல போலீசார் அனுமதி வழங்க மறுத்து விட்டனர்.
இதை தொடர்ந்து அய்யப்ப பக்தர்கள் நடுரோட்டில் பரிதவித்து நின்றனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. பின்னர் பல மணி நேரத்துக்கு பிறகு காலை 9 மணிக்கு கூடலூர் வழியாக கர்நாடகாவுக்கு செல்ல போலீசார் அனுமதி வழங்கினர்.
இதை தொடர்ந்து அய்யப்ப பக்தர்கள் தங்களது வாகனங்களில் புறப்பட்டு சென்றனர். போலீசாரின் இந்த செயல்பாடு அய்யப்ப பக்தர்கள் மட்டுமின்றி பொதுமக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.