பள்ளிப்பட்டு
திருவள்ளூர் மாவட்டம் பள்ளிப்பட்டு தாலுகா சேதுவராகபுரம் கிராமத்தை சேர்ந்தவர் ரமேஷ் (வயது 50). முன்னாள் ராணுவ வீரர். இவருக்கும் அதே கிராமத்தை சேர்ந்த சதாசிவம் (48) என்பவருக்கும் இடையே நிலத்தகராறு இருந்து வந்தது. கடந்த 23ந் தேதி ரமேஷ் தன்னிடம் தகராறில் ஈடுபட்டதாக கூறி சதாசிவம் ஆர்.கே.பேட்டை போலீசில் புகார் செய்தார். போலீஸ் சப்இன்ஸ்பெக்டர் தியாகராஜன் ரமேஷை விசாரணைக்கு போலீஸ் நிலையத்திற்கு வரும்படி அழைத்தார். நேற்று மாலை ரமேஷ் ஆர்.கே.பேட்டை போலீஸ் நிலையத்திற்கு சென்றார். அங்கு சப்இன்ஸ்பெக்டர் தியாகராஜன் பணியில் இருந்தார். அவரிடம் சென்ற ரமேஷ், முன்னாள் ராணுவ வீரரான என்னை விசாரணைக்காக போலீஸ் நிலையத்திற்கு அழைப்பதா? என்று கூறி தகராறு செய்தார்.
பின்னர் ரமேஷ் சப்இன்ஸ்பெக்டர் தியாகராஜனை சரமாரியாக கைகளால் தாக்கியதாக கூறப்படுகிறது. இதில் சப்இன்ஸ்பெக்டர் தியாகராஜனின் உதடு கிழிந்து ரத்தம் கொட்டியது. இதைத்தொடர்ந்து அவர் சிகிச்சைக்காக சோளிங்கர் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார்.
போலீஸ் சப்இன்ஸ்பெக்டரை தாக்கிய முன்னாள் ராணுவ வீரர் ரமேஷை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.