மாவட்ட செய்திகள்

1 லட்சம் குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து

வேலூர் மாவட்டத்தில் 130345 குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்கும் முகாமை கலெக்டர் குமாரவேல்பாண்டியன் தொடங்கி வைத்தார்.

வேலூர்

வேலூர் மாவட்டத்தில் 1,30,345 குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்கும் முகாமை கலெக்டர் குமாரவேல்பாண்டியன் தொடங்கி வைத்தார்.

போலியோ சொட்டு மருந்து முகாம்

வேலூர் அரசு பென்ட்லேன்ட் மருத்துவமனையில் 5 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்கும் முகாம் நடந்தது.

மருத்துவப்பணிகள் இணை இயக்குனர் கண்ணகி, சுகாதாரப்பணிகள் துணை இயக்குனர் பானுமதி, வேலூர் மாநகர் நலஅலுவலர் மணிவண்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

வேலூர் மாவட்ட கலெக்டர் குமாரவேல்பாண்டியன் தலைமை தாங்கி ஒரு குழந்தைக்கு போலியோ சொட்டு மருந்து வழங்கி முகாமை தொடங்கி வைத்தார்.

பின்னர் கலெக்டர் கூறியதாவது:-

வேலூர் மாவட்டத்தில் 5 வயதுக்கு உட்பட்ட 1,30,345 குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்கப்படுகிறது.

இதற்காக மாவட்டம் முழுவதும் உள்ள பஸ், ரெயில் நிலையங்கள், அங்கன்வாடி மையங்கள், பள்ளிகள் உள்பட 934 இடங்களில் முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளன. அதைத்தவிர தேசிய நெடுஞ்சாலை சுங்கச்சாவடிகளிலும், போக்குவரத்துவசதி குறைவாக காணப்படும் மலைப்பகுதிகளிலும் முகாம்கள் கூடுதலாக அமைக்கப்பட்டுள்ளன.

3,548 பணியாளர்கள்

அண்டை மாநிலங்கள் மற்றும் பிற மாவட்டங்களில் இருந்து வேலை மற்றும் வியாபாரம் நிமித்தமாக வேலூர் மாவட்டத்தில் தங்கி பல்வேறு பணிகளில் ஈடுபடும் நபர்களின் குழந்தைகள் மற்றும் இலங்கை தமிழர்களின் குழந்தைகளுக்கும் போலியோ சொட்டு மருந்து வழங்க சிறப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இந்த பணியில் சுகாதாரத்துறை, சமூகநலத்துறை உள்பட பல்வேறு துறைகளை சேர்ந்த 3,548 பணியாளர்கள் மற்றும் 116 மேற்பார்வையாளர்கள் ஈடுபடுகின்றனர்.

5 வயதுக்கு உட்பட்ட அனைத்து குழந்தைகளுக்கும் போலியோ சொட்டு மருந்து வழங்கப்படும். முகாமில் சொட்டு மருந்து போடாத குழந்தைகளுக்கு வீடு, வீடாக சென்று வழங்க ஏற்பாடு செய்யப்படும்.

குழந்தைகளுக்கு ஏற்கனவே சொட்டு மருந்து போட்டிருந்தாலும் இந்த முறையும் கட்டாயம் கொடுக்க வேண்டும்.

இவ்வாறு கலெக்டர் கூறினார்.

இதில், ரோட்டரி சங்க நிர்வாகிகள், டாக்டர்கள், செவிலியர்கள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.