மாவட்ட செய்திகள்

நாமக்கல் மாவட்டம் முழுவதும் 1,254 முகாம்களில் போலியோ சொட்டு மருந்து அமைச்சர் மதிவேந்தன் தொடங்கி வைத்தார்

நாமக்கல் மாவட்டம் முழுவதும் 1,254 முகாம்களில் போலியோ சொட்டு மருந்து அமைச்சர் மதிவேந்தன் தொடங்கி வைத்தார்

நாமக்கல்:

நாமக்கல் மாவட்டத்தில் நேற்று 5 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு 1,254 முகாம்களில் போலியோ சொட்டு மருந்து வழங்கப்பட்டது. இந்த முகாமை அமைச்சர் மதிவேந்தன் தொடங்கி வைத்தார்.

போலியோ சொட்டு மருந்து

நாமக்கல் மாவட்ட அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்கும் முகாம் மாவட்ட கலெக்டர் ஸ்ரேயா சிங் தலைமையில் நடைபெற்றது. எம்.எல்.ஏ.க்கள் ராமலிங்கம், பொன்னுசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர். தமிழக சுற்றுலாத்துறை அமைச்சர் டாக்டர் மதிவேந்தன் குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்கி முகாமை தொடங்கி வைத்தார். இந்த முகாமில் கலெக்டரின் மகளுக்கும் போலியோ சொட்டு மருந்து கொடுக்கப்பட்டது.

இதுகுறித்து சுகாதாரத்துறை அதிகாரிகள் கூறியதாவது:-

நாமக்கல் மாவட்டத்தில் கடந்த ஆண்டு நடைபெற்ற போலியோ சொட்டு மருந்து முகாமில் 5 வயதிற்குட்பட்ட 1 லட்சம் குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்கப்பட்டுள்ளது. அது போல தற்போது நடைபெறும் முகாமில் 1 லட்சத்து 20 ஆயிரம் குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்க திட்டமிடப்பட்டு உள்ளது.

1,202 முகாம்கள்

இப்பணிக்காக கிராமப்பகுதியில் 1,052 முகாம்களும், நகராட்சி பகுதியில் 150 முகாம்களும் என மொத்தம் 1,202 முகாம்கள் அமைக்கப்பட்டு உள்ளன. இதில் பொது சுகாதாரத்துறை, ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்டம், சத்துணவு, பள்ளிக்கல்வித்துறை, ஊரக வளர்ச்சி மற்றும் உள்ளாட்சித்துறை, வருவாய் துறை, ரோட்டரி சங்கம், மகளிர் சுய உதவிக்குழுக்கள் மற்றும் தன்னார்வலர்கள் என சுமார் 4,927 பணியாளர்கள் ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர்.

மேலும் மக்கள் கூடும் இடங்களான பஸ் நிலையம், ரெயில் நிலையம், சந்தைகள், தியேட்டர்கள், கோவில்கள், சுங்கச்சாவடி போன்ற இடங்களில் 52 சிறப்பு முகாம்கள் அமைக்கப்பட்டு உள்ளன. சமுதாயத்தில் பின் தங்கியுள்ள மக்களான நாடோடிகள், நரிக்குறவர்கள், கட்டுமான தொழிலாளர்களின் குழந்தைகள் மற்றும் போக்குவரத்து வசதி இல்லாத மலை கிராமங்களில் உள்ள குழந்தைகள் பயன்பெறும் வகையில் 22 நடமாடும் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது.

போலியோ இல்லாத சமுதாயம்

எனவே நாமக்கல் மாவட்டத்தை சேர்ந்த தாய்மார்கள் தங்கள் வீடுகளில் உள்ள அன்று பிறந்த குழந்தை முதல் 5 வயதிற்குட்பட்ட அனைத்து குழந்தைகளுக்கும் ஏற்கனவே சொட்டு மருந்து கொடுத்திருந்தாலும் மீண்டும் தற்போது நடைபெறும் முகாம்களில் அளிக்கப்படும் போலியோ சொட்டு மருந்து வழங்கி, போலியோ இல்லாத சமுதாயத்தை உருவாக்க ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

இதில் நாமக்கல் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை முதல்வர் டாக்டர் சாந்தா அருள்மொழி, சுகாதார பணிகள் துணை இயக்குனர் பிரபாகரன் உள்பட அரசுத்துறை அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.