மாவட்ட செய்திகள்

தூத்துக்குடியில் பொங்கல் பொருட்கள் விற்பனை களைகட்டியது

தூத்துக்குடியில் பொங்கல் பொருட்கள் விற்பனை களைகட்டி வருகிறது. வாழைத்தார்களின் விலை கடுமையாக உயர்த்தி விற்கப்படுகிறது.

தூத்துக்குடி

தூத்துக்குடியில் பொங்கல் பொருட்கள் விற்பனை களைகட்டி வருகிறது. வாழைத்தார்களின் விலை கடுமையாக உயர்த்தி விற்கப்படுகிறது.

பொங்கல் பண்டிகை வருகிற 14ந் தேதி கொண்டாடப்படுகிறது. இதையொட்டி மக்கள் பொங்கல் வைத்து வழிபாடு செய்வார்கள். அப்போது கரும்பு, மஞ்சள், வாழைப்பழம் உள்ளிட்டவைகளை வைத்து வழிபாடு நடத்துவது வழக்கம். இதனால் பொங்கல் பொருட்கள் அனைத்தும் விற்பனைக்காக தூத்துக்குடியில் குவித்து வைக்கப்பட்டு உள்ளன. தேனி, மதுரை உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து கரும்பு கட்டுகள் விற்பனைக்கு வந்து உள்ளன. ஒரு கட்டு கரும்பு ரூ.400 வரை விற்பனை செய்யப்படுகிறது.

புதுக்கோட்டை மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் பயிரிடப்பட்டு இருந்த மஞ்சள் குலைகள் அறுவடை செய்யப்பட்டு, விற்பனைக்காக தூத்துக்குடி மார்க்கெட்டில் குவித்து வைக்கப்பட்டு உள்ளன.

அதே நேரத்தில் பருவமழை பொய்த்ததால் வாழை விவசாயம் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால், வாழைக்காய் விளைச்சலும் குறைந்துள்ளது. இதனால், வெளி மாவட்டங்களில் இருந்தும் கோழிக்கூடு, பச்சை வாழை உள்ளிட்டவை விற்பனைக்காக வந்து உள்ளன. தூத்துக்குடி மாவட்டத்தில் திருச்செந்தூர், ஆத்தூர், பழையகாயல் போன்ற பகுதிகளில் இருந்து வாழைத்தார்கள் விற்பனைக்கு கொண்டு வரப்படுகின்றன. கடந்த ஆண்டை விட குறைவாக வாழைத்தார்கள் விற்பனைக்கு வருவதால், விலை இரண்டு மடங்கு அதிகமாக விற்பனையானது. ஒரு நாட்டு வாழைத்தார் ரூ.700 முதல் ரூ.800 வரையும், சக்கை ரூ.600க்கும், கதலி ரூ.350க்கும், பூலான்சென்டு ரூ.600க்கும், செவ்வாழை ரூ.1000க்கும், பச்சை வாழை ரூ.450க்கும், கோழிக்கூடு ரூ.600க்கும் விற்பனையானது.

பொங்கலையொட்டி வீட்டின் முன்பு வண்ண கோலங்களை வரைவார்கள். இதனால் வண்ண கோலப்பொடிகள் ஏராளமாக விற்பனைக்கு வந்து உள்ளன. ஒரு பாக்கெட் கோலப்பொடி ரூ.10க்கு விற்பனையானது. பனங்கிழங்குகளும் மார்க்கெட்டில் அதிகமாக விற்பனைக்கு வைக்கப்பட்டு உள்ளன. இதில் ஒரு கட்டு பனங்கிழங்கு ரூ.80 முதல் ரூ.100 வரை விற்பனை செய்யப்பட்டன. பனை ஓலை விற்பனையும் களைகட்டியது.