மாவட்ட செய்திகள்

கோபி ஆர்.டி.ஓ. அலுவலகத்தில் கோரிக்கைகளை வலியுறுத்தி மாற்றுத்திறனாளிகள் தர்ணா போராட்டம்

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோபி ஆர்.டி.ஓ. அலுவலகத்தில் மாற்றுத்திறனாளிகள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

கடத்தூர்

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோபி ஆர்.டி.ஓ. அலுவலகத்தில் மாற்றுத்திறனாளிகள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

குடியேறும் போராட்டம்

கோபி, சத்தியமங்கலம், தாளவாடி, அந்தியூர், பவானி, புளியம்பட்டி, நம்பியூர் உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த சுமார் 100-க்கும் மேற்பட்ட மாற்றுத்திறனாளிகள் கோபி ஆர்.டி.ஓ. அலுவலகத்தில் நேற்று ஒன்று திரண்டனர். பின்னர் அலுவலகம் முன்பு உட்கார்ந்து தர்ணா போராட்டம் நடத்தினர். இதற்கு மாநில செயலாளர் ராஜேஷ் தலைமை தாங்கினார். மாவட்ட தலைவர் பாலு முன்னிலை வகித்தார்.

போராட்டத்தின்போது மாற்றுத்திறனாளிகள் கூறியதாவது:-

அரசாணையின் படி 100 நாள் வேலைத்திட்டத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கு ஒரு நாளில் 4 மணி நேரம்தான் வேலை தர வேண்டும். அதற்கு முழுமையான கூலி கொடுக்க வேண்டும்.

நடவடிக்கை எடுக்க வேண்டும்

கோட்டாச்சி தலைவர்கள், மாற்றுத்திறனாளிகள் குறைதீர் கூட்டங்களை மாதம் ஒரு முறை நடத்தி குறைகளை கேட்டறிந்து அவைகளை தீர்த்து வைக்க வேண்டும் என அரசாணை இருந்தும் அது சரிவர நடக்கவில்லை.

இவ்வாறு மாற்றுத்திறனாளிகள் கூறினார்கள்.

மேலும் கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களும் எழுப்பினார்கள்.

அதற்கு கோபி ஆர்.டி.ஓ. பழனிதேவி கூறும்போது, மாதம்தோறும் கூட்டம் நடத்தப்படும் என்றார். இதனை ஏற்றுக்கொண்ட மாற்றுத்திறனாளிகள் போராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர். இதையொட்டி கோபி ஆர்.டி.ஓ. அலுவலகத்தில் துணை போலீஸ் சூப்பிரண்டு ஆறுமுகம் தலைமையில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது.