மாவட்ட செய்திகள்

இறந்தவரின் உடலை எரிக்க முடியாமல் குடும்பத்தினர் போராட்டம்

ராமநாதபுரத்தில் நகராட்சிக்கு சொந்தமான எரிவாயு தகனமேடை செயல்படவில்லை. எரிக்க விறகும் இல்லை என்று 4 மணி நேரம் இறந்தவரின் உடலை எரிக்க முடியாமல் தவித்ததால் குடும்பத்தினர் திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

ராமநாதபுரம்,

ராமநாதபுரத்தில் நகராட்சிக்கு சொந்தமான எரிவாயு தகனமேடை செயல்படவில்லை. எரிக்க விறகும் இல்லை என்று 4 மணி நேரம் இறந்தவரின் உடலை எரிக்க முடியாமல் தவித்ததால் குடும்பத்தினர் திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

சுடுகாடு

ராமநாதபுரத்தில் இறந்தவர்களின் உடலை எரித்து தகனம் செய்வதற்கு நகராட்சி சார்பில் அல்லிக்கண்மாய் பகுதியில் எரிவாயு தகன சுடுகாடு அமைந்துள்ளது. தனியாரிடம் குத்தகை விடப்பட்டு இந்த எரிவாயு சுடுகாடு செயல்பட்டு வருகிறது.

முறையான பராமரிப்பு மற்றும் நிர்வாகமின்மை காரணமாக இந்த எரிவாயு சுடுகாடு பெரும்பாலான நாட்களில் செயல்படுவதில்லை என்ற குற்றசாட்டு எழுந்துள்ளது. இதுதவிர, அதிகஅளவில் கட்டணம் வசூலிப்பதாகவும் அங்கு சென்றதும் மீண்டும் பணம் கேட்பதாகவும் குற்றம் சாட்டி வருகின்றனர். இந்தநிலையில் இதுதொடர்பாக சமீபத்தில் நடந்த நகராட்சி கூட்டத்தில் கண்டனம் தெரிவிக்கப் பட்டபோது குத்தகையை ரத்து செய்து நகராட்சி நிர்வாகமே செயல்படுத்த கோரிக்கை விடுக்கப்பட்டது.

கட்டணம்

இவ்வாறு ராமநாதபுரம் அல்லிக்கண்மாய் சுடுகாட்டின் அவலம் நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது. இதுதவிர, எரிவாயு மூலம் தகனம் செய்யாமல் ரூ.3 ஆயிரத்து 500 கட்டணம் செலுத்தியும் விறகுகள் மூலமே தகனம் செய்யப் படுவதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் நேற்று ராமநாத புரம் மூலக்கொத்தளம் பகுதியை சேர்ந்த சுசிலா என்பவர் இறந்துவிட்டதால் அவரின் உடலை குடும்பத்தினர் முறையாக ரூ.3 ஆயிரத்து 500 கட்டணம் செலுத்தி ரசீது பெற்று அல்லிக்கண்மாய் சுடுகாட்டிற்கு எடுத்து சென்றனர். அங்கு சென்றதும் எரிவாயு தகன மையம் செயல்படவில்லை என்று கூறி விறகு மூலம் தகனம் செய்வதாக கூறியுள்ளனர்.

போராட்டம்

முறையாக செய்தால் போதும் என்று தயாரானபோது விறகு இல்லை என்று கூறினார்களாம். விறகு வந்து கொண்டு இருக்கிறது என்று கூறி சுமார் 4 மணி நேரமாகியும் விறகு வராததாலும் அதற்கான எந்த நடவடிக்கையும் எடுக்காத காரணத்தினாலும் இறந்தவரின் உடலை தகனம் செய்ய முடியாத நிலை ஏற்பட்டது. ஒரு கட்டத்தில் தகனம் செய்ய கொண்டுவந்து காத்திருக்க கூடாது என்ற மனநிலைக்கு வந்த குடும்பத்தினர் அவர்களே விறகு வாங்கி வர ஏற்பாடு செய்துள்ளனர்.

முறையான பணம் கட்டி ரசீது பெற்ற நிலையிலும் தகனம் செய்யாமல் காத்திருக்க வைத்து அலைக்கழிக்க வைத்துள்ளதை கண்டித்து இறந்தவரின் உடலை வைத்து குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. இதுகுறித்து நகராட்சி நிர்வாகம் துரித நடவடிக்கை எடுத்து எரிவாயு தகன கூடம் செயல்பட வைக்க வேண்டும் என்று அனைத்து தரப்பினரும் கோரிக்கை விடுத்துள்ளனர்.