மாவட்ட செய்திகள்

பெண்ணிடம் ஆபாச பேச்சு; சூப்பர் மார்க்கெட் உரிமையாளருக்கு போலீஸ் வலைவீச்சு

பெண்ணிடம் ஆபாச பேச்சு சூப்பர் மார்க்கெட் உரிமையாளருக்கு போலீஸ் வலைவீச்சு

ஏரல்:

ஏரல் பாரதியார் ரோட்டை சேர்ந்தவர் அழகு ராமகிருஷ்ணன் (வயது 62). இவர் அந்த பகுதியில் சூப்பர் மார்க்கெட் நடத்தி வருகிறார். இந்த நிலையில் இவரும், இவருடைய நண்பர் திருவழுதிநாடார்விளையை சேர்ந்த ஆத்திப்பழம் என்பவரும் சேர்ந்து அந்த பகுதியில் கடந்த 8 நாட்களுக்கு முன் புதிய ஓட்டல் தொடங்கினர். உமரிக்காட்டை சேர்ந்த ஒரு பெண் அங்கு கேஷியராக வேலைபார்த்து வருகிறார். தினமும் இரவு அழகுராமகிருஷ்ணன் ஓட்டலுக்கு சென்று கணக்கை சரிபார்த்து வந்துள்ளார்.

இந்த நிலையில், சம்பவத்தன்று இரவு அங்கு வந்த அழகுராமகிருஷ்ணன் தன்னை தொட்டு பேசியதாகவும், மேலும் செல்போனில் என்னிடம் மன உளைச்சல் ஏற்படும்படி ஆபாசமாக பேசியதாகவும், இதை வெளியே சொல்லக்கூடாது என மிரட்டியதாகவும் அந்தப்பெண் ஏரல் போலீசில் புகார் செய்துள்ளார். இதையடுத்து போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ராஜாமணி வழக்குப்பதிவு செய்து, சூப்பர் மார்க்கெட் உரிமையாளர் அழகுராமகிருஷ்ணனை வலைவீசி தேடி வருகிறார்.