கடலூர்,
புதிய பென்ஷன் திட்டத்தை ரத்து செய்து, பழைய பென்ஷன் திட்டத்தை அமல்படுத்த வேண்டும். தபால் துறையை தனியாருக்கு தாரைவார்ப்பதை மத்திய அரசு கைவிட வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கடலூர் மாவட்டத்தில் நேற்று அகில இந்திய தபால் ஊழியர்கள், தேசிய தபால் ஊழியர்கள் மற்றும் கிராமிய தபால் ஊழியர்கள் பொது வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர். தொடர்ந்து அவர்கள் கடலூர் தலைமை தபால் நிலையத்தில் ஆர்ப்பாட்டம் நடத்தினர். ஆர்ப்பாட்டத்துக்கு தேசிய தபால் ஊழியர் சங்க கோட்ட செயலாளர் சம்பத்குமரன் தலைமை தாங்கினார். அகில இந்திய தபால் ஊழியர் சங்க கோட்ட செயலாளர் கிருஷ்ணகுமார், தேசிய தபால் ஊழியர் சங்க கோட்ட செயலாளர் நம்பி, கோட்ட பொருளாளர் ரமேஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் தலைமை, துணை, கிராமிய தபால் நிலைய ஊழியர்கள் திரளாக கலந்து கொண்டனர். தபால் நிலைய ஊழியர்களின் இந்த வேலை நிறுத்த போராட்டத்தால் தபால் அலுவலகங்கள் ஊழியர்கள் இன்றி வெறிச்சோடி காணப்பட்டது. இது பற்றி தபால் அலுவலக ஊழியர் சங்க நிர்வாகி ஒருவர் கூறுகையில், கடலூர், சிதம்பரம் ஆகிய தலைமை தபால் நிலையங்கள், 71 துணை தபால் நிலையங்கள், 290 கிராமிய தபால் நிலையங்களில் பணியாற்றி வரும் 800 ஊழியர்கள் இந்த வேலை நிறுத்த போராட்டத்தில் பங்கேற்றனர். ஒரு சிலர் மட்டும் இதில் பங்கேற்கவில்லை.
வேலைநிறுத்தத்தால், தபால் சேவை, தபால் சேமிப்பு, விரைவு தபால், பார்சல் சேவை என ரூ.2 கோடிக்கு பரிவர்த்தனை பாதிக்கப்பட்டுள்ளது என்றார்.