திருப்பூர்,
டாஸ்மாக் மதுபான விலையை உயர்த்தி தமிழக அமைச்சரவை கூட்டத்தில் அறிவிக்கப்பட்டது. இதையொட்டி நேற்று முதல் டாஸ்மாக் மதுபானங்களில் விலை உயர்த்தப்பட்டது. அதன்படி குவார்ட்டர் அளவு மதுபாட்டில் ரூ.10 முதல் ரூ.12 வரையிலும், ஆப் அளவு கொண்ட மதுவகைகள் ரூ.20 வரையிலும், புல் அளவு மது வகைகள் ரூ.40 வரையிலும் விலை அதிகரித்துள்ளது.
இந்த விலை உயர்வுப்படி திருப்பூர் மாவட்டத்தில் உள்ள டாஸ்மாக் கடைகளில் நேற்று மதுவிற்பனை செய்யப்பட்டது. மது பானங்களின் விலையை உயர்த்திய பின்னரும் நேற்று தொழிலாளர்கள் வழக்கம் போல் மதுபானங்களை வாங்கி அருந்தினார்கள். அதிலும் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தொழிலாளர்களுக்கு போனஸ் வழங்கப்பட்டு வருவதால் மதுப்பிரியர்கள் விலை உயர்வை பற்றி கவலைப்படாமல் மது வாங்கி குடித்ததை காண முடிந்தது.
திருப்பூரில் குவார்ட்டர் அளவு மதுபாட்டில் ஒன்றுக்கு அரசு அறிவித்த விலை உயர்வை காட்டிலும் கூடுதலாக ரூ.5 அதிகரித்து விற்பனை செய்யப்பட்டதாக மதுப்பிரியர்கள் தெரிவித்தனர். அதுபோல் ஆப் அளவு மது வகைகளுக்கு கூடுதலாக ரூ.10-ம், புல் அளவு மது வகைகளுக்கு ரூ.20 வரையிலும் விற்பனை செய்யப்பட்டதாக கூறினார்கள். விலை உயர்வால் மதுப்பிரியர்கள் அதிர்ச்சி அடைந்தாலும் கூட, எப்படியும் மது வாங்கிக் குடிக்க வேண்டும் என்பதில் ஆர்வம் செலுத்தினார்கள்.
டாஸ்மாக் கடைக்கு வந்த மதுப்பிரியர் பாலசுப்பிரமணியன் என்பவர் கூறும்போது, உடல் அசதிக்கு மது வாங்கி அருந்த தொடங்கி இப்போது வழக்கமாக மது குடித்து வருகிறேன். ஆனால் மது விலையை திடீரென்று உயர்த்தியது பெரும் அதிர்ச்சியாக உள்ளது. அரசு அறிவித்த விலை உயர்வை காட்டிலும் அதிக விலைக்கு மது விற்பனை செய்கிறார்கள். தீபாவளி பண்டிகை நேரத்தில் மது விலையை உயர்த்தியது வேதனையானது என்றார்.
மதுப்பிரியர் அண்ணாமலை என்பவர் கூறும்போது, மதுவிலையை உயர்த்தியதனால் குடியை நான் நிறுத்த முடியாது. குடிக்கின்ற மதுவின் அளவு வேண்டும் என்றால் குறையும். எங்களை போன்ற ஏழைகளிடம் இருந்து வழிப்பறி செய்யும் வகையில் மதுபானங்களில் விலை உயர்த்தப்பட்டுள்ளது. இதனால் பாதிக்கப்படுவது ஏழை கூலி தொழிலாளிகள் தான் என்றார்.
மது விலையை உயர்த்தினாலும் மதுப்பிரியர்களின் எண்ணிக்கை மதுக்கடைகளில் குறையவில்லை. எப்போதும் போலவே டாஸ்மாக் கடைகளில் கூட்டம் அதிகமாக காணப்பட்டது.