தூத்துக்குடி,
தூத்துக்குடியில், மத்திய கூட்டுறவு வங்கியில் கடனுக்கான வட்டி உயர்வை ரத்து செய்ய வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தொடக்க கூட்டுறவு வங்கி பணியாளர்கள் நேற்று காலை ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
தமிழ்நாடு மாநில தொடக்க கூட்டுறவு வங்கி அனைத்து பணியாளர்கள் சங்கம் சார்பில் தூத்துக்குடியில் நேற்று காலை ஆர்ப்பாட்டம் நடந்தது. மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி முன்பு நடந்த ஆர்ப்பாட்டத்துக்கு மாவட்ட தலைவர் கல்யாணராமன் தலைமை தாங்கினார். தென்மண்டல தலைவர் பாண்டியன், செயலாளர் ஆசிரிய தேவன், மாவட்ட செயலாளர் சுதாகர், பொருளாளர் ஜெயப்பிரகாஷ், கவுரவ பொதுச் செயலாளர் ஜேசுராஜன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிறப்பு அழைப்பாளராக மாநில பொதுச் செயலாளர் முத்துப்பாண்டியன் கலந்து கொண்டு பேசினார்.
ஆர்ப்பாட்டத்தில் தூத்துக்குடி மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி தன்னிச்சையாக கடன்களுக்கு வட்டி உயர்த்தி அறிவித்து இருப்பதை உடனடியாக ரத்து செய்ய வேண்டும், பயிர் காப்பீடு செய்த விவசாயிகளுக்கு உரிய நிவாரணத் தொகை வழங்க வேண்டும், பயிர் காப்பீடு சந்தா வசூல் தொகையில் சங்கங்களுக்கு 4 சதவீதம் விளிம்பு தொகையை வழங்க வேண்டும், விவசாய கடன் மற்றும் விவசாய நகைக்கடனுக்க தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களிடம் இருந்து கட்டாய வட்டி வசூல் செய்வதை நிறுத்த வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷம் எழுப்பினர்.
ஆர்ப்பாட்டத்தில் நெல்லை மாவட்ட செயலாளர் சுப்பிரமணியன், சேகர், தென்மண்டல இணை செயலாளர்கள் திருமணிதங்கம், பெனிஸ்கர், தூத்துக்குடி மாவட்ட துணைத்தலைவர் முருகேசன், இணை செயலாளர்கள் ஆறுமுகப்பாண்டியன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.