மாவட்ட செய்திகள்

அதிகாரிகள் சோதனை: தயாரிப்பு விவரங்கள் இல்லாத வெளிநாட்டு சிகரெட்டுகள் பறிமுதல்

ராமநாதபுரத்தில் தொழிலாளர் துறை அதிகாரிகள் சோதனை: தயாரிப்பு விவரங்கள் இல்லாத வெளிநாட்டு சிகரெட்டுகள் பறிமுதல்

ராமநாதபுரம்,

ராமநாதபுரத்தில் தொழிலாளர் துறை அதிகாரிகள் சோதனையில் தயாரிப்பு விவரங்கள் இல்லாத வெளிநாட்டு சிகரெட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன.

சோதனை

சென்னை தொழிலாளர் ஆணையர் அமுதா, மதுரை தொழிலாளர் இணை ஆணையர் சரவணன் ஆகியோரது உத்தரவின்பேரில் தொழிலாளர் துணை ஆணையர் ராதாகிருஷ்ணன் ஆலோசனையின்படி ராமநாதபுரம் தொழிலாளர் ஆய்வாளர் காளிதாஸ் தலைமையில் துணை ஆய்வாளர் விசுவநாதன், உதவி ஆய்வாளர் அந்தோணிசாமி புஷ்பராஜ் ஆகியோர் ராமநாத புரம் சாலைத்தெரு, அரசு ஆஸ்பத்திரி சாலை, கேணிக்கரை, அக்ரகாரம் ரோடு, வண்டிக்காரத்தெரு, பவுண்டுக்கடை தெரு ஆகிய பகுதிகளில் உள்ள கடைகளில் சோதனை மேற்கொண்டனர்.

அப்போது 3 கடைகளில் தயாரிப்பாளர், பொட்டலமிடுபவர், நிகர எடை, அதிகபட்ச சில்லறை விற்பனை விலை உள்ளிட்ட தயாரிப்பு விவரங்கள் குறிப்பிடப்படாமல் விற்பனை செய்யப்பட்ட வெளிநாட்டு சிகரெட்டுகளை பறிமுதல் செய்த அதிகாரிகள் சம்பந்தப்பட்ட விற்பனையாளர்களுக்கு தலா ரூ.5,000 வீதம் அபராதம் விதித்தனர்.

எச்சரிக்கை

மாவட்டம் முழுவதும் கடைகளில் சோதனை செய்து உரிய விவரங்கள் குறிப்பிடப்படாத பொட்டல பொருட்கள் பறிமுதல் செய்யப்படும் என்றும், தொடர்ந்து அதே குற்றத்தை செய்யும் கடைக்காரர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு ரூ.1 லட்சம் வரை அபராதம் விதிக்கப்படும் என்றும் ராமநாதபுரம் மாவட்ட தொழிலாளர் ஆய்வாளர் காளிதாஸ் எச்சரிக்கை விடுத்துள்ளார்.