மாவட்ட செய்திகள்

திருச்சி மாநகராட்சியில் சொத்து வரி உயர்வு

திருச்சி மாநகராட்சிக்கு கடன் மற்றும் நிலுவைத்தொகையை செலுத்த ரூ.330½ கோடி தேவை உள்ளது. இதனால் சொத்துவரியை உயர்த்தி அவசர கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

திருச்சி மாநகராட்சியில் சொத்துவரி உயர்த்துவது மற்றும் சீராய்வு தொடர்பான அவசர கூட்டம் மாநகராட்சி அலுவலகத்தில் உள்ள மாமன்ற கூட்ட அரங்கில் நேற்று மாலை நடைபெற்றது. மேயர் மு.அன்பழகன் தலைமை தாங்கினார். மாநகராட்சி ஆணையாளர் முஜிபுர்ரகுமான், துணை மேயர் திவ்யா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கூட்டத்தில் மண்டல தலைவர்கள், உதவி ஆணையாளர்கள் மற்றும் கவுன்சிலர்கள், அதிகாரிகள் கலந்து கொண்டனர். கூட்டம் தொடங்கியதும் சொத்து வரி உயர்வு தொடர்பான தீர்மானம்முதல்தீர்மானமாக விவாதத்துக்கு மேயரால் முன் வைக்கப்பட்டது. தீர்மானம் குறித்து மேயர் பேசும்போது கூறியதாவது:-
ரூ.330கோடி தேவை
மாநகராட்சிக்கு மின்கட்டணம் ரூ.2 கோடி, பிற துறைகளுக்கு செலுத்த வேண்டிய நிலுவைத் தொகை ரூ.116.13 கோடி, திரும்ப செலுத்தவேண்டியகடன்நிலுவை ரூ.207.08 கோடி, பணியாளர் பணப்பயன் ரூ.5.36 கோடி என மொத்தமாக ரூ.330 கோடியே 57 லட்சம் தற்போதுள்ள நிலையில் தேவைப்படும் நிதியாக உள்ளது.
பொதுமக்களின் அடிப்படை வசதிகளை செய்து கொடுக்கவும், பராமரிப்பதற்கும் ஆகும் செலவு பல மடங்கு உயர்ந்துள்ளன. மேலும், மின் கட்டணமும், பணியாளர்களின் ஊதியமும், செலவினமும் ஏற்பட்டு வருகிறது. மேலும், மாநகராட்சியில்ஏற்படுத்தப்பட்டுள்ள அடிப்படை கட்டமைப்புகளை மேம்படுத்தி, பராமரிப்பு செய்தல் போன்றவற்றிற்கு தேவைப்படும் கூடுதல் செலவினம், மாநகராட்சி செலுத்த வேண்டிய கடன் தொகை மற்றும் பிற துறைகளுக்கு நிலுவைத்தொகை செலுத்த வேண்டியுள்ளது.
சொத்து வரி உயர்வு
அதற்கு மாநகராட்சியின் தற்போதைய நிதி நிலைமை போதுமானதாக இல்லை. மாநகராட்சியின் வருவாயில் பிரதானமானது சொத்து வரி மூலம் கிடைக்கும் வருவாய்தான். மேலும் திருச்சி மாநகராட்சியை சென்னைக்கு நிகராக பெருநகராக மாற்ற அதிக நிதி தேவைப்படுகிறது.
மத்திய அரசு வரி சீராய்வு செய்தால் தான் நிதியை விடுவிக்க முடியும் என்று கூறி இருக்கிறது. மத்திய அரசின் நிதியை பெறவேசொத்துவரிஉயர்த்தப்படுகிறது. அதன்படி, குடியிருப்புகளுக்கு 600 சதுர அடிக்கு குறைவான பரப்பளவில் உள்ளவற்றுக்கு 25 சதவீதமும், 600-1200 சதுர அடி வரை 50 சதவீதமும், 1,201 முதல் 1,800 சதுர அடி வரை 75 சதவீதமும், 1,800 சதுர அடிக்கு அதிகமாக உள்ளவற்றுக்கு 100 சதவீதமும், தொழிற்சாலை மற்றும் சுயநிதி பள்ளி மற்றும் கல்லூரி கட்டிடங்களுக்கு 75 சதவீதமும், வணிக நிறுவனங்கள், வணிக பயன்பாட்டு கட்டிடங்களுக்கு 100 சதவீதமும் சொத்துவரிஉயர்வுசெய்யஅனுமதித்துகொண்டுவரப்படும் இந்த தீர்மானத்தை அனைத்து கவுன்சிலர்களும் நிறைவேற்றி தரவேண்டும்.
இவ்வாறு மேயர் பேசினார்.
மறுபரிசீலனை செய்ய மறுப்பு
பின்னர் தி.மு.க. கூட்டணி கட்சி கவுன்சிலர்கள், சொத்துவரி உயர்வை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர். அதற்கு மேயர் பேசும் போது, சுமார் 83 ஆயிரம் வீடுகள் 600 சதுர அடி பரப்பளவுக்குள் உள்ளன. இவர்கள் ரூ.324 வரி செலுத்தினால் இனி ரூ.405 செலுத்துவார்கள். அதிக வீடுகளுக்கு 25சதவீதம்மட்டுமேவரிஉயர்த்தப்பட்டுள்ளது. அதனால் சொத்துவரி உயர்வு தீர்மானத்தை திரும்ப பெற முடியாது என்றார்.
இதைத்தொடர்ந்து சொத்துவரி உள்பட 19 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. அப்போது சில தீர்மானங்களில் உள்ள குறைகளை கவுன்சிலர்கள் சுட்டிக்காட்டினார்கள். மேலும் தங்கள் பகுதியில் உள்ள குறைகளையும் சுட்டிக்காட்டினார்கள். அதை பரிசீலனை செய்வதாக மேயர் தெரிவித்தார். மேலும் மாநகரில் தடைசெய்யப்பட்ட பிளாஸ்டிக் பைகள், டம்ளர்களை பயன்படுத்தக்கூடாது என்றும், அதை பயன்படுத்தினால் அபராதம் விதிக்கும்படி அதிகாரிகளுக்கு அவர் பரிந்துரை செய்தார்.