மாவட்ட செய்திகள்

வருங்கால வைப்புநிதி குறை தீர்க்கும் கூட்டம் தென்காசியில், 10–ந் தேதி நடக்கிறது

நெல்லை தொழிலாளர் வைப்புநிதி அலுவலகத்தின் வருங்கால வைப்புநிதி குறைதீர்க்கும் கூட்டம் தென்காசியில் வருகிற 10–ந் தேதி நடக்கிறது.

நெல்லை,

நெல்லை தொழிலாளர் வைப்புநிதி அலுவலகத்தின் வருங்கால வைப்புநிதி குறைதீர்க்கும் கூட்டம் தென்காசியில் வருகிற 10ந் தேதி நடக்கிறது.

இதுதொடர்பாக வருங்கால வைப்புநிதி உதவி ஆணையாளர் கு.ரமேஷ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:

வருங்கால வைப்புநிதி நிறுவனத்தின் நெல்லை மண்டல ஆணையாளர் சனத்குமார், வருகிற 10ந் தேதி (வெள்ளிக்கிழமை) தென்காசியில், வருங்கால வைப்புநிதி உங்கள் அருகில் எனும் வருங்கால வைப்புநிதி குறைதீர்க்கும் நாள் கூட்டத்தை நடத்த உள்ளார். அதன்படி டி.டி. அருணாசலம் ரோட்டரி ஹால், ஆர்.டி.ஓ. அலுவலகம் அருகில் (துணை பதிவாளர் அலுவலகம் பின்புறம்), தென்காசி என்ற முகவரியில் இந்த கூட்டம் நடக்கிறது.

நெல்லை மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களை சேர்ந்த வருங்கால வைப்புநிதி உறுப்பினர்கள் மற்றும் தொழில் அதிபர்களின் குறைகள் ஏதேனும் தீர்க்கப்படாமல் இந்த அலுவலகத்தில் ஒரு மாத காலத்திற்கும் மேலாக நிலுவையில் இருப்பின் அவற்றை நிவர்த்தி செய்ய மனு மூலம், மண்டல ஆணையாளர், வருங்கால வைப்புநிதி நிறுவனம், என்.ஜி.ஓ. காலனி, திருநெல்வேலி7 என்ற முகவரிக்கு அனுப்பி வைக்கலாம். மனுவின் மேலே வருங்கால வைப்புநிதி உங்கள் அருகில் என குறிப்பிட்டு அவற்றை வருகிற 28ந் தேதிக்குள் இந்த அலுவலகத்திற்கு கிடைக்குமாறு அனுப்ப வேண்டும்.

வருங்கால வைப்புநிதி குறைதீர்க்கும் கூட்டம், கீழ்க்கண்ட கால அட்டவணைப்படி நடைபெறும்.

1. வருங்கால வைப்புநிதி உறுப்பினர்கள் காலை 10.30 மணி முதல் மதியம் 1 மணி வரை.

2. தொழில் அதிபர்கள் மாலை 3 மணி முதல் 4 மணி வரை.

3. வருங்கால வைப்புநிதி விலக்கு அளிக்கப்பட்ட நிறுவனங்கள் மாலை 4 மணி முதல் 5 மணி வரை.

மனு அனுப்பியவர்கள் வருகிற 10ந் தேதி (வெள்ளிக்கிழமை) அன்று மேற்கண்ட கால அட்டவணைப்படி மண்டல ஆணையாளரை நேரில் சந்தித்து தங்கள் குறைகளை நிவர்த்தி செய்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.