மாவட்ட செய்திகள்

சாலையை சீரமைக்கக்கோரி பொதுமக்கள் நாற்றுநடும் போராட்டம்

ஆரணி அருகே சாலையை சீரமைக்கக்கோரி பொதுமக்கள் நாற்றுநடும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

ஆரணி

ஆரணி அருகே சாலையை சீரமைக்கக்கோரி பொதுமக்கள் நாற்றுநடும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

சேறும், சகதியுமான சாலை

திருவண்ணாமலை மாவட்டம், ஆரணியை அடுத்த இரும்பேடு ஊராட்சிக்கு உட்பட்ட அரிகரநகர் மற்றும் ராஜீவ்காந்தி நகர் பகுதிகளில் சாலைகள் மண் சாலையாக உள்ளது.

தற்போது பெய்து வரும் மழையின் காரணமாக சாலைகள் சேறும், சகதியுமாக இருப்பதால் பொதுமக்கள் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர்.

இதுகுறித்து அதிகாரிகளிடம் பலமுறை முறையிட்டும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று பொதுமக்கள் கூறுகின்றனர். இதனால் ஆத்திரம் அடைந்த அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் இன்று சேறும், சகதியுமான சாலையில் நாற்றுநடும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

சாலை மறியல்

மேலும் இரும்பேடு கூட்ரோட்டில் இருந்து ஊருக்கு செல்லும் கிராம சாலையில் தரையில் அமர்ந்து பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

இதுகுறித்து தகவல் அறிந்ததும் இரும்பேடு ஊராட்சி மன்ற தலைவர் தரணிவெங்கட்ராமன், துணைத்தலைவர் கே.சரவணன், ஆரணி ஊராட்சி ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலர் சீனிவாசன், ஊராட்சி செயலாளர் அசோக் ஆகியோர் சம்பவ இடத்துக்கு வந்து பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

அப்போது அவர்கள், ஒன்றிய பொது நிதியில் இருந்து பேவர் பிளாக் சாலை அமைக்க முடிவு செய்திருப்பதாகவும், அதற்காக திட்ட மதிப்பீடு தயாரிக்கும் பணிகள் நடைபெற்று வருவதாகவும் தெரிவித்தனர்.

அதைத் தொடர்ந்து பொதுமக்கள் சாலை மறியலை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர்.

----