மாவட்ட செய்திகள்

ஊர்க்காவல் படை வீரர் மீது நடவடிக்கை கோரி பொதுமக்கள் சாலை மறியல்

ஊர்க்காவல் படை வீரர் மீது நடவடிக்கை கோரி பொதுமக்கள் சாலை மறியிலில் ஈடுபட்டனர்

விகைகாட்டி
அரியலூர் மாவட்டம், வி.கைகாட்டி ரெட்டிப்பாளையம் கிராமத்தை சேர்ந்த கண்ணன் மகன் மணிகண்டன் (வயது 32). அதே பகுதியை சேர்ந்த இவரது நண்பர் வேல்முருகன் (29). இவர்கள் இருவரும் மோட்டார் சைக்கிளில் அரியலூர் மாவட்டம், வி.கைகாட்டி மண்ணுழி சாலை பகுதியில் உள்ள டாஸ்மாக் கடை ஒன்றில் மது வாங்கி அருந்தி விட்டு வி.கைகாட்டியை நோக்கி வந்து கொண்டிருந்தனர்.அப்போது எதிரே வந்த கார், மோட்டார் சைக்கிள் மீது மோதுவது போல் சென்றதாக கூறப்படுகிறது. உடனே மணிகண்டன், வேல்முருகன் ஆகியோர் டாஸ்மாக் கடை அருகே கார் டிரைவரிடம் வாக்கு வாதத்தில் ஈடுபட்டனர். அப்போது வெண்மான்கொண்டான் கிராமத்தை சேர்ந்த ஊர்காவல் படை வீரர் வினோத்குமார் வாக்குவாதத்தில் ஈடுபட்ட வேல்முருகன், மணிகண்டன் ஆகியோரிடம் விசாரித்தார். அப்போது வாக்குவாதம் முற்றியதில் ஊர்காவல் படை வீரர் வேல்முருகன், மணிகண்டனை தாக்கியுள்ளார். இதில் மணிகண்டன் மூக்கில் இருந்து ரத்தம் கொட்டியது. இதுகுறித்து தகவல் அறிந்த மணிகண்டனின் உறவினர்கள் மற்றும் பொதுமக்கள் ஊர்காவல் படை வீரர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக்கோரி வி.கைகாட்டி மேம்பாலம் அருகே சாலை மறியலில் ஈடுபட்டனர்.
இதுகுறித்த தகவலின்பேரில் சம்பவ இடத்திற்கு வந்த கயர்லாபாத் போலீஸ் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் சேகர் மற்றும் போலீசார் மணிகண்டன் மற்றும் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது சம்பந்தப்பட்ட ஊர்காவல் படை வீரர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என போலீசார் உறுதியளித்ததின் பேரில் பொதுமக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.