காரைக்கால்
நாட்டிலேயே ரேஷன் கடை இல்லாத மாநிலமாக புதுச்சேரி திகழ்கிறது என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் தலைமைக் குழு உறுப்பினர் ஜி.ராமகிருஷ்ணன் கூறினார்.
ரேஷன் கடை இல்லாத மாநிலம்
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் தலைமைக் குழு உறுப்பினர் ராமகிருஷ்ணன் இன்று காரைக்கால் வந்தார். அப்போது அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
நாட்டிலேயே ரேஷன் கடை இல்லாத மாநிலமாக திகழ்வது புதுச்சேரி மட்டும் தான் என்பது வேதனையான விஷயம். என்.ஆர்.காங்கிரஸ்-பா.ஜ.க. கூட்டணி ஆட்சி அமைந்தால் ரேஷன் கடைகள் மீண்டும் திறக்கப்படும் என்று வாக்குறுதி அளித்தார்கள். ஆனால் ஆட்சி அமைந்து ஓராண்டு ஆகியும் இன்னும் ரேஷன் கடைகள் திறக்கப்படவில்லை. தேர்தல் நேரத்தில் இரு கட்சிகளும் அளித்த வாக்குறுதிகளும் நிறைவேற்றப்படாமல் உள்ளது. விவசாயிகளுக்கான நெல் கொள் முதல், விதை, இடுபொருட்கள் வழங்குவது, பயிர் காப்பீடு, இன்சூரன்ஸ் வழங்குவது அனைத்தும் கேள்விக்குறியாகவே உள்ளது.
செயலற்ற அரசு
புதுச்சேரியில் எந்த ஆட்சி வந்தாலும் காரைக்கால் அரசு பொது மருத்துவமனையில் எந்தவித மேம்பாட்டு பணிகளும் மேற்கொள்வதில்லை. இந்த ஆட்சியிலும் அதுவே நடக்கிறது. மொத்தத்தில் புதுச்சேரி அரசு செயலற்ற அரசாகவே செயல்படுகிறது. மாநில அரசுதான் இப்படி என்றால், மத்திய அரசு பொதுமக்களின் நலனற்ற அரசாக திகழ்கிறது.
குறிப்பாக, மக்களின் அத்தியாவசிய உணவுப் பொருட் களுக்கு கூட வரி விதித்து வயிற்றில் அடிக்கும் அரசாக இருக்கிறது.
இவ்வாறு அவர் கூறினார்.
பேட்டியின்போது, கட்சி நிர்வாகிகள் வின்சென்ட், தமீம் மற்றும் பலர் உடன் இருந்தனர்.