தானே,
தானே மாவட்ட பொதுப்பணித்துறையில் விஷால் கோசாவி (வயது34) என்பவர் அதிகாரியாக பணியாற்றி வருகிறார். இவரது அலுவலகத்தில் ஒப்பந்ததாரர் ஒருவர் தனக்கு வழங்கப்பட்ட பணிக்கு ரூ.5 லட்சத்து 79 ஆயிரம் நிலுவை தொக கேட்டு விண்ணப்பித்து இருந்தார். இதற்கு தணிக்கை அதிகாரிக்கு ரூ.5 ஆயிரமும், பணி ஆணை வழங்க ரூ.10 ஆயிரம் என மொத்தம் ரூ.15 ஆயிரம் லஞ்சமாக தருமாறு விஷால் கோசாவி கேட்டு உள்ளார். இதற்கு ஒப்பந்ததாரர் ரூ.10 ஆயிரம் தருவதாக கூறிவிட்டு சம்பவம் குறித்து லஞ்ச ஒழிப்பு போலீசில் புகார் அளித்தார். இந்த புகாரின் படி போலீசார் யோசனைப்படி லஞ்சப்பணம் ரூ.10 ஆயிரத்தை அந்த நபர் அதிகாரியிடம் கொடுத்தார். பணத்தை பெற்ற அதிகாரி விஷால் கோசாவியை லஞ்ச ஒழிப்பு போலீசார் கையும் களவுமாக பிடித்து கைது செய்தனர். மேலும் அவர் மீது ஊழல் தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.