மாவட்ட செய்திகள்

லாலாப்பேட்டை அருகே மணல் குவாரி, மறு விற்பனை நிலையத்தை முற்றுகையிட்ட 74 பேர் கைது

லாலாப்பேட்டை அருகே மணல் குவாரி, விற்பனை நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்ட 74 பேரை போலீசார் கைது செய்தனர்.

லாலாப்பேட்டை,

முற்றுகை போராட்டம்

கரூர் மாவட்டம் லாலாப்பேட்டையை அடுத்த சிந்தலவாடி காவிரி ஆற்றில் புதிதாக மணல் குவாரி தொடங்கப்பட்டுள்ளது. இங்கிருந்து மணல் கொண்டு செல்லப்பட்டு அருகே உள்ள மறு விற்பனை நிலையத்தில் கொட்டப்பட்டு, அங்கிருந்து லாரிகளுக்கு ஏற்றப்படுகிறது. இந்த மணல் குவாரியை கடந்த 4ந் தேதி பொதுமக்கள் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். இந்நிலையில் நேற்று வழக்கம் போல மணல் குவாரி செயல்பட தொடங்கியது.

இதையடுத்து காவிரியில் மணல் அள்ளுவதால் நிலத்தடி நீர் மட்டம் பாதிக்கப்பட்டு, குடிநீர் ஆதாரம் பாதிக்கப்படுவதாக சிந்தலவாடி மறு விற்பனை நிலையத்தை அப்பகுதி பொதுமக்கள் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.

அதே வேளையில் மணல் குவாரியை லாலாப்பேட்டை பகுதியை சேர்ந்த பொதுமக்கள் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். இது குறித்து தகவல் அறிந்த கிருஷ்ணராயபுரம் தாசில்தார் முருகேசன், குளித்தலை போலீஸ் துணை சூப்பிரண்டு சீனிவாசன், குளித்தலை இன்ஸ்பெக்டர் குருதாதன் ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று, முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

இதில் பொதுமக்களுக்கு பாதுகாப்பான குடிநீர் வழங்க தேவையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று அதிகாரிகள் உறுதி அளித்தனர். ஆனாலும் தொடர்ந்து அனுமதியில்லாமல் போராட்டம் நடத்தியதாக சிந்தலவாடி மறு விற்பனை நிலையம் மற்றும் மணல் குவாரியை முற்றுகையிட்டு போராட்டம் நடத்திய 74 பேரை லாலாப்பேட்டை போலீசார் கைது செய்து லாலாப்பேட்டையில் உள்ள ஒரு தனியார் திருமண மண்டபத்தில் அடைத்தனர். பின்னர் அவர்கள் அனைவரும் மாலையில் விடுதலை செய்யப்பட்டனர்.

படம் உண்டு

==========

சிந்தலவாடி மறு விற்பனை நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்திய பொதுமக்களிடம் கிருஷ்ணராயபுரம் தாசில்தார் முருகேசன் மற்றும் போலீசார் பேச்சுவார்த்தை நடத்திய போது எடுத்த படம்.

==========